டில்லி

மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான எண்ணிக்கையும் ஒப்புகை சீட்டு எண்ணிக்கையும் ஒத்துப் போனதாக தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் அனைத்து தொகுதியிலும் பயன்படுத்தப்பட்டது. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அதற்காக தேர்தல அணையம் 22.3 லட்சம் வாக்கு சீட்டு இயந்திரமும், 16.3 லட்சம் கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 17.3 லட்சம் வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரமும் பயன்படுத்தியது..

இந்த தேர்தலின் வாக்கு என்ணிக்கையின் போது அனைத்து வாக்கு ஒப்புகை சீட்டுகளும் எண்ணப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால அவ்வாறு எண்ணினால் முடிவு அறிவிக்கப்பட 5 நாட்கள் ஆகலாம் என ஆணையம் தெரிவித்தது. அதை ஒட்டி குறிப்பிட்ட சில ஒப்புகை சீட்டு இயந்திரங்களின் சீட்டுக்களை மட்டும் என்ண முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு 20,625 இயந்திரங்களின் சீட்டுக்கள் எண்ணப்பட்டன.

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர், “கடந்த 2013-14 ஆம் வருடத்தில் இருந்து ஒப்புகை சீட்டு இயந்திரங்களின் பயன்பாடு தொடங்கியது. ஆரம்பத்தில் அந்த இயந்திரம் ஓரிரு தொகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப் பட்டது. அதன் பிறகு அது விரிவாக்கப்பட்டு இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இதில் வாக்கு என்ணிக்கையின் போது 20,625 இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுக்கள் எண்ணப்பட்டன.

அவ்வாறு எண்ணும் போது இந்த இரு இயந்திரங்களின் எண்ணிக்கையும் ஒத்துப் போய் உள்ளன. ஒரு இடத்தில் கூட ஒரு இயந்திரத்தில் கூட எவ்வித வேற்றுமையும் இல்லாமல் இருந்தது. சென்ற முறை 4425 ஒப்புகை சீட்டு இயந்திரங்களின் சீட்டுக்களை எண்ணும் போதும் இதைப் போலவே எவ்வித வேற்றுமையும் இல்லாமல் இருந்தது” என தெரிவித்துள்ளார்.