உ.பி.யில் 3000 டன் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்படவில்லை: இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்கம்

லக்னோ: உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் சுமார் 3000 டன் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்திய புவியியல் ஆய்வு மையம் கூறி இருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் சோன்பத்ராவில் அதிக தங்கம் இருக்கும் 2 பெரிய சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.  சோனா பகதி பகுதியில் 2,943 டன் தங்கமும் ஹார்தி பகுதியில் 646 கிலோ தங்கமும் இருக்கலாம் என்றும் தகவல்கள் பரவின.

கண்டுபிடிக்கப்படும் தங்கத்தின் அளவுகள் உறுதியாகும் பட்சத்தில், உலகில் அதிக தங்கத்தை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் கூறப்பட்டது.

இந் நிலையில், சோன்பத்ரா மாவட்டத்தில் 3,000 டன் என மதிப்பிடப்பட்ட தங்க வைப்பு கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற தரவுகளை ஜிஎஸ்ஐயைச் சேர்ந்த எவரும் வழங்கவில்லை. சோன்பத்ரா மாவட்டத்தில் இத்தகைய பரந்த அளவிலான தங்க வைப்புகளை மதிப்பிடவில்லை என்று ஜிஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் எம்.ஸ்ரீதர் கொல்கத்தாவில் தெரிவித்தார்.

சோன்பத்ரா மாவட்ட சுரங்க அதிகாரி கே கே ராய் கூறியதாவது: மாநில அரசுடன் கணக்கெடுப்பு நடத்திய பின்னர் தாதுக்களின் எந்தவொரு வளத்தையும் பற்றிய எங்கள் கண்டுபிடிப்புகளை நாங்கள் பகிர்ந்து கொள்வோம். நாங்கள் 998-99 மற்றும் 1999-2000 ஆகிய ஆண்டுகளில் அந்த பிராந்தியத்தில் பணிகளை மேற்கொண்டோம்.

தங்கத்திற்கான ஜிஎஸ்ஐயின் ஆய்வு பணிகள் திருப்திகரமாக இல்லை. சோன்பத்ரா மாவட்டத்தில் தங்கத்திற்கான முக்கிய ஆதாரங்களைக் கொண்டு வர முடிவுகள் ஊக்கமளிக்கவில்லை என்றார்.