கூட்டணியில் அன‍ைத்தும் சுமூகமாக உள்ளது – சொல்வது நிதிஷ்குமார்!

பாட்னா: ஐக்கிய ஜனதாதளம் – பாரதீய ஜனதா இடையிலான கூட்டணியில் பிரச்சினைகள் இல்லை, அனைத்தும் சுமூகமாக உள்ளது என்று கூறியுள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.

பீகாரில் இந்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலையொட்டி, இரண்டு கட்சிகளுக்கும் இடையே போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக முரண்பாடுகளும் மோதல்கள் எழுந்துள்ளன.

பாதிக்குப் பாதி தொகுதிகளை பாரதீய ஜனதா எதிர்பார்க்கும் நிலையில், ஜக்கிய ஜனதாதளமோ, தாங்களே அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கூறிவருகிறது.

இதுகுறித்த வெளிப்படையான மோதலை நிதிஷ்குமார் கட்சியின் துணைத்தலைவரான பிரஷாந்த் கிஷோர் துவக்கிவைக்க, அதற்கு துணைமுதல்வராக உள்ள பாரதீய ஜனதாவின் சுஷில்குமார் மோடி பதிலடி கொடுத்தார். பின்னர் அதற்கு, மீண்டும் பிரஷாந்த் கிஷோர் பதில் தாக்குதல் தொடுத்தார்.

இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எதிலளித்த நிதிஷ்குமார், “அனைத்தும் சுமூகமாக உள்ளது. எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றுள்ளார்.