‘நோ’ குடிதண்ணீர் ‘நோ’ ஓட்டு: மத்தியபிரதேசத்தில் பாஜ அரசுக்கு எதிராக பெண்கள் போர்க்கொடி

போபால்:

பாரதியஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தில், மாநில அரசுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

தங்களுக்கு தேவையான குடிநீர் வழங்கவில்லை என்றால் பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று கொதித்தெழுந்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவையில் ஆட்சி காலம் முடிவடைவதையொட்டி, வரும் 28ந்தேதி 230 தொகுதிகளை கொண்ட மாநில சட்டமன்றத்துக்கு  தேர்தல் நடைபெற உள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி, கடந்த 2003ம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்து இருமுறை மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார்.  ஆட்சியை தக்க வைக்க பாஜக கட்சியும், ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் கடுமையாக முயற்சித்து வருகின்றன.

ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில மாதங்களாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறார்.   மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.

இந்த நிலையில்,  தங்கள் பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவில்லை என்றால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம் என மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபேரா பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள தாமோஹ், ஜபேரா பகுதி மக்கள் தங்களுக்கு சுத்தமான குடிநீரை அரசாங்கம் வழங்க வேண்டும் என கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். “கடந்த 30 முதல் 40 வருடங்களாக போதுமான குடிநீர் கிடைக்காமல் நாங்கள் துன்பமுற்று வருவதாகவும்,  சுத்தமான குடிநீரை வழங்கவில்லையென்றால் வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டு மொத்தமாக புறக்கணிப்போம் எனக் கூறியுள்ளனர்.

இதன் காரணமாக மாநில பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.