18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை தேர்தல் நடத்தக்கூடாது:  சென்னை உயர்நீதிமன்றம்

 


சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை தேர்தல் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம்   உத்தரவு பிறப்பித்துள்ளது.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அந்த பதவி நீக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார்  அளித்தார்.

இதையடுத்து 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதைதொடர்ந்து ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் விளக்கம் அளிக்கவில்லை.

இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.  இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் அமர்வு தீர்ப்பு அளித்தது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால் மற்றொரு நீதிபதியான சுந்தர் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இரு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்பு வழங்கியதால் தகுதிநீக்க வழக்கை மூன்றாவது  நீதிபதிக்கு மாற்றி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.

மேலும் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார்.