ஜெயலலிதா மகள் என்பதற்கு ஆதாரமில்லை: அம்ருதா மனு தள்ளுபடி

சென்னை:

ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை நடத்த வேண்டும் என்று, பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற இளம்பெண் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெ.மறைவை தொடர்ந்து அவரது சொத்துக்கு வாரிசாக அறிவிக்க வேண்டும் என ஜெ.அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், ஜெயலலி தாவே,  எனது தாய் என்று அறிவிக்க வேண்டும் என்றும், அதற்காக அவரது உடலை தோண்டி யெடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்ற அமர்ருதா சென்னை  உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில்,    “கடந்த 14.8.1980 அன்று நான் ஜெயலலிதாவுக்கு மகளாகப் பிறந்தேன். மூன்று மாத குழந்தையாக இருந்தபோதே ஜெயலலிதாவின் சகோதரியான சைலஜாவுக்கு தத்து கொடுக்கப்பட்டேன். தற்போது தான் நான் ஜெயலலிதாவின் மகள் என்பது உறவினர்கள் மூலமாக எனக்கு தெரியவந்தது. ஜெயலலிதா வின் உடலைத் தோண்டியெடுத்து குலவழக்கப்படி சம்பிரதாய சடங்குகளைச் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து  ஏற்கனவே உச்சநீதி மன்றத்தில் அம்ருதா தாக்கல் செய்த வழக்கை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு  சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில்,  ஜெயலலிதாவின் ரத்த மாதிரி  இருக்கிறதா? என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியது., இதற்கிடையில், ஜெயலலிதா  அண்ணன் மகனான தீபக் மற்றும் தீபா சார்பில் அம்ருதா மனுவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

தீபா

அதில், “என் அத்தை ஜெயலலிதா வின் சொத்துகளைக் குறிவைத்தே அம்ருதா அவரின் மகள் எனக்கூறி பொய்யான வழக்கை தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு சைலஜா என்ற சகோதரியே கிடையாது. என் பாட்டி சந்தியாவுக்கு ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள். எனவே, அம்ருதாவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையின் போது,  அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அம்ருதா கூறுவது பொய் என்றும், அவர் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் போலியானவை, மோசடி யானது என்று தெரிவித்திருந்தார். அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரமும் தாக்கல் செய்யப்பட்டது.

1980 ஆகஸ்ட் 14-ம் தேதி அம்ருதா பிறந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அதே சமயத்தில் அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1980-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயலலிதா பங்கேற்ற சினிமா நிகழ்ச்சி வீடியோவில் அவர் கர்ப்பிணியாக இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார்.

ஜெயலலிதாவின் சகோதரி என கூறப்படும் சைலஜா, அம்ருதாவை வளர்த்து வந்ததாக வழக்கில் வைக்கப்படும் வாதத்தில் உண்மையில்லை எனக் குறிப்பிட்ட அரசின் வழக்கறிஞர், தனது சகோதரரி ஜெயலலிதா எனக்கூறி வார இதழுக்கு பேட்டியளித்த சைலஜாவுக்கு எதிராக சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவே அவதூறு வழக்கு தொடர்ந்த தற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

இதற்கு பதிலளித்த அம்ருதா தரப்பு வழக்கறிஞர், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்க அம்ருதாவுக்கு மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், டி.என்.ஏ. சோதனை நடத்தினால் மட்டுமே தனது தரப்பு நியாயங்கள் உண்மை என்பது தெரிய வரும் என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுவதும் மர்மமாகவே இருந்ததாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வழக்கு  நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கின் வாதங்கள் நிறைவடைந்த இன்று நீதிபதி வைத்தியநாதன் தீர்ப்பு கூறினார்.

அப்போது,ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்கவும் டி.என்.ஏ. பரிசோதனை கோருவதற்கும் அம்ருதாவிடம் எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார்