டில்லி

சாத்வி பிரக்ஞா தாகுர் கோட்சேவை தேசபக்தர் என கூறியதற்கு மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாத்வி பிரக்ஞா தாகுர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள அவர் பாஜக சார்பில் போபால் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே மும்பை தீவிரவாத தாக்குதலில் பலியான ஹேமந்த் கர்கரே மரணம் தனது சாபத்தால் நிகழ்ந்தது எனக் கூறியது சர்ச்சையை உண்டாக்கி தற்போது அடங்கி உள்ளது.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் சமீபத்தில் கோட்சேவை இந்தியாவின் முதல் தீவிரவாதி எனவும் அவர் ஒரு இந்து எனவும் குறிப்பிட்டார். இது நாடெங்கும் எதிர்ப்பை எழுப்பியது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக சாத்வி காந்தியைக் கொன்ற கோட்சேவை தேச பக்தர் என புகழ்ந்தார். அத்துடன் அவரை தீவிரவாதி எனக் கூறுபவர்களுக்கு மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்தார்.

சாத்வியின் கருத்துக்கு அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதே போன்ற கருத்தை மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே மற்றும் பாஜக தலைவர் நளின் காதில் ஆகியோரும் கூறியது பாஜகவுக்கு மிகவும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. மக்களவை தேர்தல் நடைபெறும் சமயத்தில் கிளம்பிய இந்த பிரச்னையை தீர்க்க பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இவர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்தார்.

அதை ஒட்டி கோட்சேவை புகழும் தங்கள் கருத்துக்கு மூவரும் மன்னிப்பு கேட்டனர். எதிர்க்கட்சியினர் சாத்வியின் கருத்துக்கு பிரதமர் மோடி எதுவும் பேசாமல் உள்ளது குறித்து கடுமையாக விமர்சித்தனர்.  நேற்று பிரதமர் மோடி ஒரு தொலைக்காட்சி செய்தியாளரை சந்தித்தார். அந்த சந்திப்பில் சாத்வி கருத்து குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

பிரதமர் மோடி, “கோட்சேவை தேச பக்தர் என சாத்வி கூறியது தவறானது. இது மகாத்மாகாந்தியை அவமானப்படுத்தும் செயலாகும். இதற்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் என்னால் மகாத்மா காந்தியை அவமானம் செய்த சாத்வியை மன்னிக்க முடியாது” என தெரிவித்துள்ளார். ஒரு வழியாக மோடி தனது கருத்தைக் கூறி உள்ளார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.