முகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..!

ஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில், பொதுவெளியில் முகக்கவசம் இல்லாமல் நடமாடும் சுதந்திரத்தை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.

உலகளவில், இந்த நிலையை எட்டிய முதல் நாடாக பார்க்கப்படுகிறது இஸ்ரேல்.

அந்நாட்டில், நோய் தொற்றும், மருத்துவமனையில் சேர்வதும் மிகவும் குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், வெளிநாட்டிலிருந்து வருவோருக்கான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

மேலும், வெளிநாட்டிலிருந்து திரும்பிய, எதிர்ப்பு சக்தி குறைந்த இஸ்ரேலியர்கள், தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், ஏதேனும் உருமாறிய வைரஸ் தொற்று அவர்களுக்கு இருந்தால், ஒட்டுமொத்த தடுப்பூசி முயற்சியே தோற்றுவிடும் என்பதால் இந்த விதி.

மேலும், இஸ்ரேலில், இந்திய மாறுபாட்டு வைரஸ் தொற்று ஏற்பட்ட 7 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த வைரஸின் திறன் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.