ண்டிகர்

ஞ்சாப் மாநிலத்தில் உள்ள பர்காரியில் நடந்த புனித நூல் கிழிப்பு வழக்கில் சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இல்லை என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள புர்காரி என்னும் ஊரில் உள்ள குருத்துவாராவில் வைக்கப்பட்டிருந்த சீக்கியர்களின் புனித நூல் திருடப்பட்டு சுக்குநூறாக கிழித்து தெருக்களில் வீசப்பட்டிருந்தது.  இதனால் அந்தப் பகுதியில் கடும் கலவரம் ஏற்பட்டது.   அந்த கலவரத்தில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது.   இதில் பொதுமக்கள் காவல்துறையினர் என ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.   சிபிஐ விசாரணைக்குப் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர், “இந்த பர்காரி கலவர வழக்கைப் பஞ்சாப் காவல்துறையினர் சரியான பாதையில் விசாரித்து வந்துள்ளனர்.  இந்த வழக்கு மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதலின் தலையீட்டால் சிபிஐக்கு மாற்றப்பட்டது.   மூன்று வருடங்களாக வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

ஆகவே நாங்கள் சிபிஐ விசாரணையில் நம்பிக்கை இழந்துள்ளோம்.   ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வந்த பஞ்சாப் காவல்துறையின் சிறப்பு விசாரணைப் படைக்கு இந்த வழக்கு மாற்றப்பட வேண்டும்.   மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதலில் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவராக உள்ளதால் அவரே இந்த வழக்கை சிபிஐயிடம் இருந்து மாநில காவல்துறைக்கு மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.