ஆன்லைன் வகுப்புக்களுக்குப் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க கூடாது : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை

மிழகத்தில் ஆன்லைன் வகுப்புக்களை நடத்தப் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளது.   குறிப்பாக 10 ஆம் வகுப்புத் தேர்வு இரு முறை தள்ளிப் போடப்பட்டது.  தற்போதுள்ள நிலையில் பல பள்ளிகள் ஆனலைன் மூலம் வகுப்புக்களை நடத்த முடிவு செய்தன   ஆனால்  பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புக்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளதாக ஒரு செய்தி பரவியது.

நேற்று தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வகுப்பறை நோக்கி என ஒரு பள்ளி கண்காணிப்பு செயலியை அறிமுகம் செய்தார்.  இந்த செயலி மூலம் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துரையாடவும் அதிகாரிகள் ஆய்வு செய்யவும் இந்த செயலி பய்னடும் என கூறப்படுகிறது.  இந்த செயலி முதல் கட்டமாகச் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் நிறுவப்பட்டதாகவும் தற்போது மாநிலம் எங்கும் விரிவு படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் செங்கோட்டையன், “பள்ளிகள் திறப்பது குறித்து நானும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விரைவில் சந்தித்துப் பேசி முடிவு எடுக்க உள்ளோம்.  கொரோனா தொற்று கட்டுக்குள் வருவதற்காகவும் மற்ற மாநிலங்கள் இது குறித்து எடுக்கும் முடிவு குறித்து அறியவும் நாங்கள் காத்திருக்கிறோம்.   முதல்வர் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு கூடி பள்ளி திறப்பது குறித்து ஆலோசனை செய்ய உள்ளது.   தற்போது இதற்கு அவ்வளவு அவசரம் இல்லை.

பள்ளிகள் தேவைப்பாட்டால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாகப் பள்ளிக்கு வராமலே ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தலாம்.  அதற்கு தடை விதித்தாக வந்த செய்திகள் தவறானவை    ஆன்லைன் வகுப்புக்கள் நடத்துவதற்குப் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம்.  இவ்வாறு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது தலைமை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.