சென்னை

மிழகத்தில் நடைபெற உள்ள 10ஆம் வகுப்புத் தேர்வு வினாத்தாள்களுக்கு நிலையான வடிவம இல்லை என அர்சு அறிவித்துள்ளது.

சமீபத்தில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 10 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.  அத்துடன் இந்த தேர்வுகளுக்காக ஒவ்வொரு பாடத்திலும் மாதிரி வினாத்தாள்களும் அரசின் இணைய தளங்களில் வெளியாகி உள்ளன.   மாணவர்கள் அந்த மாதிரி வினாத்தாள்களின் அடிப்படையில் தங்களைத் தேர்வுக்குத் தயார் செய்து வருகின்றனர்.

தமிழக அரசு இந்த வருடத்தில் இருந்து பத்தாம் வகுப்புக்கான பாடதிட்ட்த்தை மாற்றி உள்ளது. இந்த வருடத் தேர்வு இந்த  புதிய பாடத் திட்டத்தின் முதல் தேர்வு ஆகும்.  எனவே மாணவர்கள் மாதிரி வினாத்தாள்களைப் பின்பற்றி படித்து வருகின்றனர்.  இந்நிலையில் தமிழக அரசிடம் இருந்து வந்துள்ள அறிவிப்பு மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த அறிவிப்பில், “இந்த வருடம் அறிவிக்கப்பட்ட புதிய  பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் முதல் தேர்வில் வினாத்தாள்களுக்கான நிலையான வடிவம் இன்னும் அமைக்கப்படவில்லை.  மாதிரி வினாத்தாள்கள் என்பது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாடத்தின் பகுதிகள் மற்றும்  மதிப்பெண் பங்கீடு குறித்து விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

இதே மாதிரியில் கேள்வித் தாள்கள் அமையும் என்பது அவசியம் இல்லை.  பாடத்தின் எந்த பகுதியில் இருந்தும் கோடிட்ட இடங்களை நிரப்புதல் அல்லது சேர்த்தல் போன்ற கேள்விகள் கேட்கப்படும்.   அத்துடன்  கேள்விகள் பாடப்புத்தகத்தில் எந்தப் பகுதியில் இருந்தும் கேட்கப்படலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேத்துப்பட்டு பகுதியில் உள்ள எம்சிசி பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜே மனோகர், “கல்வித் துறை இந்த வருட தேர்வுக்கான வினாத்தாள்களுக்கு நிலையான வடிவம் இன்னும் அமைக்கப்படவில்லை என அறிவித்துள்ளது.   நாங்கள் முழு  புத்தகத்தில் இருந்தும் கேள்விகள் அமைத்து பாடம் நடத்தி வருகிறோம்.   இந்த முறைக்கு மாற நிச்சயம் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், “மாணவர்களால் தற்போது தேர்வைக் கவனமாக எழுத முடியாத நிலை உள்ளது.  இதற்காக மாணவர்களைக் குறை கூற முடியாது. இந்த முறை மாணவர்களை நுழைவுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே பாடத் திட்டம் கடினமாக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் வினாத் தாள்கள் வடிவம் குறித்துப் புரியாத நிலையும் உள்ளது.

குறிப்பாகத் தாமதமாகப் புரியும் திறன் உள்ள மாணவர்களுக்கு இது மிகவும் சுமையாக அமையும்.   அதே வேளையில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களாலும் முழுப் பாடப்புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்னும் போது அதிக  மதிப்பெண்கள் பெற முடியாத நிலை உண்டாகும்.   அது மட்டுமின்றி இது குறித்து கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்திருந்தால் ஆசிரியர்கள் அதற்கேற்ப மாணவர்களைத் தயார் செய்திருக்க முடியும்” எனக் கூறி உள்ளார்.