2 மணிநேரங்களுக்கு குறைவான உள்நாட்டு பயணங்களுக்கு இனி விமான உணவு கிடையாது!

புதுடெல்லி: இரண்டு மணிநேர காலஅளவிற்கு குறைவான உள்நாட்டு விமானப் பயணத்திற்கு, உள்விமான உணவு சேவையை தடைசெய்துள்ளது மத்திய அரசு.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“உள்நாட்டிற்கு இயங்கும் விமான சேவைகளில், 2 மணிநேரங்கள் மற்றும் அதற்கும் அதிகமான பயண நேரங்கள் கொண்ட சேவைகளுக்கு, உணவு வழங்கல் அனுமதிக்கப்படும்” என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலின் இரண்டாம் அலையை ஒட்டி, விமானப் போக்குவரத்தில், கடந்த 2 வாரங்களாக ஏற்பட்ட சரிவையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம், 2 மணிநேரங்களுக்கு மேலாக நீடிக்கும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துகளிலும், உணவு வழங்கல் தொடர்பாக புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வெட்டுப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் முடிந்தளவிற்கு அருகிலுள்ள இருக்கைகளில் உணவு வழங்குதல் உள்ளிட்டவை இவற்றுள் அடக்கம்.

மேலும், இந்த கட்டுப்பாடுகள், இனிவரும் நாட்களில், 3 முதல் 4 மணிநேரங்கள் வரையான பயண தூரங்களுக்கும் விதிக்கப்படலாம் என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ‍அதேசமயம், பயணிகள் தங்களின் சொந்த உணவைக் கொண்டுவந்து விமானத்தில் உண்ணுவதற்கு அனுமதி மறுக்கிறதா இந்தப் புதிய விதிமுறை? என்பது குறித்து இன்னும் விளக்கம் கிடைக்கவில்லை.