கொரோனா பரவல் – பறிபோனது பட்டமளிப்பு விழா சந்தோஷம்!

சென்னை: கொரோனா பரவலால், கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாட காத்திருந்த மாணவ சமுதாயத்தினருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களில், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பட்டமளிப்பு விழா என்பது, மாணாக்கர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாகும்! பட்டதாரி என்ற ஒரு முக்கியமான வாழ்க்கைத் தகுதியை மாணாக்கர்கள் பெறும் தருணமாகும் அது!

ஆனால், கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் இந்த 2020ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா நடைபெற வாய்ப்பில்லை. எனவே, வண்ண அலங்காரங்களுக்கு மத்தியில், கருப்பு அங்கியும் தொப்பியும் அணிந்து, தமது பட்டங்களைப் பெறலாம் என்ற மாணாக்கர்களின் ஆசை நிராசையாகியுள்ளது.

குறிப்பாக, குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் அந்த ஆசை அதிகம் இருப்பது இயல்பே. ஆனால், இந்த 2020ம் ஆண்டில் சிக்கியவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமே!

இதுதொடர்பாக, பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்கள் தங்களின் ஏமாற்றத்தையும் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

பட்டமளிப்பு விழா பறிபோய்விட்ட கவலை மட்டுமல்ல, இந்த தொற்றுநோய் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், தங்களுக்கான எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்தும் அவர்கள் கவலைப்பட வேண்டியுள்ளது. ஏனெனில், இந்தக் கொரோனா முடக்கம், பல தனியார் துறைகளை கடினமாக பாதித்துள்ளதால், இருக்கும் பலரே தங்கள் பணிகளையும் ஊதியத்தையும் இழந்துள்ளதால், புதியவர்களான தங்களுக்கு எப்படியான வாய்ப்புகள் வரும் நாட்களில் அமையும் என்ற கவலையும் அவர்களைச் சேர்ந்து கொண்டுள்ளது.