லக்னோ:

உ.பி. மாநிலம் மகோபா மாவட்டம் சர்கரி தொகுதி எம்எல்ஏ.வாக இருப்பவர் பிரிபுஷன் ராஜ்புத். பாஜ எம்எல்ஏ.வான இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘‘முஸ்லிம் சமுதாய மக்கள் ராமர் கோவில் கட்டுவதில் நாட்டில் உள்ள 100 கோடி இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அப்படி செய்யவில்லை என்றால் நாங்களும் முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள மாட்டோம். ராமர் கோவில் கட்ட தடை ஏற்படுத்தினாலோ அல்லது கட்டுமான பணியை நிறுத்தினாலோ நாங்கள் முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதை த டுப்போம்’’ என்று அதில் பேசியுள்ளார்.

மேலும், அவர் அந்த வீடியோவில்,‘‘ முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறுபான்மை அந்தஸ்தை திரும்ப பெற வேண்டும். ஹஜ் பயணத்திற்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து அவர் கருத்து கூறுகையில்,‘‘ இது என்னுடைய கருத்தல்ல. 100 கோடி இந்துக்களின் கருத்து. நான் வீடியோவில் தெரிவித்த கருத்துக்களில் தெளிவான நிலைபாட்டை கொண்டுள்ளேன். இதை முஸ்லிம்கள் எச்சரிக்கை என்று எடுத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல’’ என்றார்.

இவர் முன்னாள் எம்பி கங்கா சரண் ராஜ்புத் மகன். கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்க மறுப்பு தெரிவித்தபோது கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு கங்கா சரண் தற்கொலை மிரட்டல் விடுத்ததல் மூலம் இவர் வெளிச்சத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.