கோவை:

கோவையில் பாஜ நிர்வாகிகள் வீடுகளின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,  கோவை பாஜக நிர்வாகிகள் வீடுகளில் குண்டு வீசப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும்,  பாஜகவினர் மீதான தாக்குதல் இனி நடைபெறக் கூடாது என்று கூறினார்.

கடந்த 7ம் தேதி குண்டு வீசியபோதே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது இந்த  தாக்குதல் நடந்திருக்காது என்ற அவர்,  நீங்கள் குண்டு வீசிக்கொண்டே இருப்பீர்கள் நாங்கள் பார்த்துக்கொண்டே இருப்போமா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

இனிமேல் பாஜகவினர் அப்படி இருக்க மாட்டார்கள் என்று பேசிய அவர்,  குண்டு வைப்பவர்களுக்கு இரு கை இருக்காது என்று எச்சரிக்கை விடுத்தார்.  சாது மிரண்டால் காடு தாங்காது என்பது போல பாஜகவினர் பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது என்றும், தமிழக்ததில் பாஜகவினர் அதிகம் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் கூறினார்.

காவல்துறையினர் இந்த விவகாரத்தில்  மெத்தன போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டியவர்,  இனியும் காவல்துறையினர் காலம் தாழ்த்தினால் அடுத்தக்கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

இரவு நேரத்தில் எங்கள் அலுவலகத்திலும், மாவட்ட தலைவர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசிய கோழைகள், நேரிலே வாருங்கள் என்று அழைப்பு விடுத்த நிலையில், எத்தனை குண்டுகள் வெடித்தாலும் பாஜக தொண்டனை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார்.

மேலும்,  இது கருப்பு மண் அல்ல காவி மண் என்றும்,  தமிழகத்தில்  நிச்சயம்  ராம ராஜ்ஜியம் மலரும் என்று கூறினார்.

ஒரு பாஜக கவுன்சிலர் கூட இல்லாத திரிபுராவில், கடும் உழைப்பால் பாஜக வெற்றி பெற்றதைப் போல், தமிழகத்திலும் வெற்றி பெற்று  ஆட்சியை பிடிப்போம்  என்றும், அதனால்தான் மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியபடி,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று கூறிய அவர்,  தமிழகம் வஞ்சிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.