டில்லி:

லைநகர் டில்லியில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5வது ஆண்டாக அங்கு மின் கட்டணம் உயர்த்தப்பட வில்லை. நாட்டிலேயே குறைந்த மின் கட்டணம் வசூலிக்கும் மாநிலமும் டில்லிதான்.

டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுபடி மின் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டணம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

இதன் மூலம்வீடு ஒன்றுக்கு மாதம் ரூ. 105 முதல் ரூ. 750 வரை சேமிக்கலாம் என்று  மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 1,200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் ரூ. 7.75 -ல் இருந்து ரூ.8 ஆக அதிகரிகப்பட்டு உள்ளது.

இந்த புதிய கட்டணங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருகின்றன. இது தொடர்பாக தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதி யுமான எஸ்.எஸ். சவுகான் கூறியதாவது,

2 கிலோவாட் வரையில் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கான நிரந்தர மின் கட்டணம் ரூ. 125 -இல் இருந்து ரூ. 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2 கிலோ வாட்டுக்கு அதிகமாகவும் 5 கிலோ வாட்டுக்கு உள்ளேயும் பயன்படுத்தும் நுகர்வோருக்கான நிரந்தர மின் கட்டணம் ரூ. 140-இல் இருந்து ரூ. 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

5 கிலோ வாட்டுக்கு அதிகமாகவும் 15 கிலோ வாட்டுக்குள்ளேயும் பயன்படுத்தும் நுகர்வோருக்கான நிரந்தர மின் கட்டணம் ரூ. 175 -இல் ரூ. 100ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டு உபயோக நுகர்வோர் மாதம் ரூ. 105 முதல் ரூ. 750 வரை சேமிக்கலாம். 3 கிலோ வாட்ஸ் ஆம்பீர்ஸ் மேல் பயன்படுத்தும் வர்த்தக ரீதியிலான மின் நுகர்வோருக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ. 8-இல் இருந்து ரூ. 8.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 3 கிலோ வாட்ஸ் ஆம்பீர்ஸ் வரை பயன்படுத்தும் சிறு கடைகளுக்காக புதிய துணைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 6 வசூலிக்கப்படும். 1,200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஒரு யூனிட் ரூ. 7.75 -இல் இருந்து ரூ.8 ஆக அதிகரிகப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இந்த புதிய மின் கட்டணம் மாற்றி யமைக்கப்பட்டு உள்ளது. தில்லியில் போக்குவரத்தால் ஏற்படும் காற்று மாசைக் குறைக்க இ- ரிக்ஷா, மின்சார வாகனங்களுக்கான மின் சார்சிங் செய்வதற்கான கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், நிரந்தர மின் கட்டணத்தை தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் கடுமையாக உயர்த்தியது. இதற்கு தில்லி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 2 கிலோ வாட்டுக்கு குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு தில்லி அரசே மானியம் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மின் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. டில்லியில் ஆம்ஆத்மி அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதுபோல நாட்டிலேயே குறைந்த மின் கட்டணம் உள்ள மாநிலம் டில்லி என்பதும் குறிப்பிடத்தக்கது.