கல்விக் கடன்களை ரத்துசெய்யும் திட்டம் அரசுக்கு இல்லை: நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: மாணாக்கர்களுக்கான கல்விக் கடன்களை ரத்துசெய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கல்விக் கடன் ரத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் கூறியதாவது, “கடந்த 3 நிதியாண்டுகளில் நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்ப செலுத்தப்பட வேண்டிய கல்விக் டன் தொகை மதிப்பு ரூ.75451 கோடியாக அதிகரித்துள்ளது.

இத்தொகையில், சுமார் 10% வராக்கடன் பட்டியலில் சேர்ந்துள்ளது. கல்விக் கடனை வசூலிக்கும் விஷயத்தில் வங்கிகள் மேற்கொள்ளும் கெடுபிடிகள் காரணமாக பல தற்கொலைகள் நிகழ்வதாகக் கூறப்படுவது தவறான தகவல். கல்விக் கடனை வசூலிக்கும் விவகாரத்தில் மென்மையானப் போக்கை கையாள வேண்டுமென்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

கார்ப்பரேட்டுகளுக்கு ஒவ்வொரு முறையும் பல்லாயிரம் கோடிகள் மற்றும் பல லட்சம் கோடிகள் கடன் தொகைகளை எளிதாக தள்ளுபடி செய்யும் அரசு, கல்விக் கடன் விஷயத்தில் கராராக இருப்பது கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.