அமித்ஷாவை இயக்குனராக கொண்ட வங்கி டெபாசிட்டில் விதிமீறல் இல்லை….நபார்டு விளக்கம்

டில்லி:

அமித்ஷாவை இயக்குனராக கொண்ட அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் 2016ம் ஆண்டி-ல் பணமதிப்பிழப்பு அமலில் இருந்த போது 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

இந்நிலையில் இது குறித்து நாபார்டு விளக்கமளித்துள்ளது. அதில், ‘‘பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.500 ரூ.1000 நோட்டுகள் வழக்கத்துக்கு மாறாக அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்யப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் விதிப்படியே டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அந்த வங்கியில் மொத்தம் 17 லட்சம் பேர் கணக்கு வைத்துள்ளனர். 1.6 லட்சம் பேர் சராசரியாக ரூ.46 ஆயிரத்து 795 டெபாசிட் செய்தனர். 9.37 சதவீதம் வாடிக்கையாளர்களே செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றினர்.

98.94 சதவீதம் கணக்குதாரர்கள் ரூ.2.5 லட்சத்துக்கு குறைவாகவே டெபாசிட் செய்தனர். 5 நாட்களில் 1.60 லட்சம் கணக்குதாரர்கள் மூலம் ரூ.746 கோடி டெபாசிட் வந்தது உண்மைதான். இது வங்கியின் டெபாசிட்களில் 15 சதவீதம் மட்டுமே. டெபாசிட்கள் அனைத்தும் விதிமுறையின்படியே நடந்தது. குஜராத்தை விட மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்தான் அதிகம்.