திருவனந்தபுரம்: கேரள தலைமைச்செயலக தீ விபத்தில் முக்கிய கோப்புகள் எரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், எந்த முக்கியமான கோப்புகளும் எரிந்து சாம்பலாக வில்லை என்று கேரள மாநில சட்ட அமைச்சர் ஏ.கே.பாலன் விளக்கம் அளித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் தங்கக்கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் பினராயி அரசின் அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளது மாநில அரசுக்கு கடும் தலைவலியை கொடுத்துள்ளது. இதன் காரணமாக, மாநில அரசு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த பரபரப்பான சூழலில்,  கேரள மாநில  தலைமை செயலகத்தில் கடந்த ஆக.25-ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான  ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாகின. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே தீ விபத்து நாடகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை அழிக்க திட்டமிட்டு இந்த தீவிபத்தை நடத்தி இருப்பதா கவும், காங்கிரஸ்  மற்றும் பா.ஜ. உறுப்பினர்கள் தலைமை செயலகம் முன் தர்ணா செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கேரள மாநில சட்டத்துறை அமைச்சர் ஏ.கே. பாலன் கூறியது, தீவிபத்தில் முக்கிய மான கோப்புகள் எதுவும் எரிக்கப்படவில்லை. கோப்புகளின் விவரங்களை மின் கோப்புகளிலிருந்து பெறலாம். ஏதேனும் கோப்புகள் காணவில்லை என்றாலும், அவை சம்பந்தப் பட்ட பிரிவு அலுவல கத்தின் தனிப்பட்ட பதிவுகளில் கிடைக்கின்றன.
தலைமை செயலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பாரதியஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என்று குற்றம் சாட்டினார்.