டில்லி:

வங்கிகளுக்கு வந்து சேர்ந்த ரூ 15.28 லட்சம் கோடியில் எவ்வளவு ரூபாய் கறுப்புப் பணம் என்பதை தற்போது கூற இயலாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 ஆகியவை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பான அனைத்து பணிகளும் முடிந்த பின்னரும் எவ்வளவு பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்துள்ளது என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.

சமீபத்தில் 99 சதவீத ரூபாய் நோட்டுக்கள் திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் கறுப்பு பணம் எவ்வளவு வெளியில் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி இதற்கான விளக்கத்தை தற்போது அளித்துள்ளது. அதன் விபரம்:

வங்கிகளுக்கு வந்து சேர்ந்த ரூ 15.28 லட்சம் கோடியில் எவ்வளவு ரூபாய் கறுப்புப் பணம் என்பது தற்போது கூற இயலாது. மேலும், அதனை சரிபார்க்கும் பணி முடிந்த பிறகு தான் கூற முடியும் என தெரிவித்துள்ளது. இந்த ரூ.15.28 லட்சம் கோடி ரூபாயை நாடாளுமன்றக் குழுவின் முன் வைக்கப் போவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பெரிய அளவில் பணம் வந்துள்ளதால் இதை எண்ணி முடிக்க கால அவகாசம் தேவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. அதே போல எவ்வளவு கறுப்புப் பணம் வெள்ளையாக மாறியது என்பது பற்றியும் தகவல் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2016&-17 ஆம் ஆண்டில் பொருளாதார தேக்கம் என்பது பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே நிகழ்ந்துவிட்டது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 1 சதவீத செல்லாத நோட்டுக்களே திரும்ப வரவில்லை என்று கூறியது.