கர்நாடகா காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை – சித்தராமையா

பெங்களூரு

காங்கிரஸ் – மஜத கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாக கூறப்பட்ட தகவலை காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மறுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மஜத வின் குமாரசாமியின் துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வராவும் பொறுப்பு ஏற்றுள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் காங்கிரஸ் கட்சி மற்றும் மஜத கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் வரும் 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் மஜத கட்சியும் தனித்தனியே போட்டி இட உள்ளதாக தகவல் வெளீயாகின. அதை ஒட்டி காங்கிரஸ் கூட்டணி பிளவு பட்டுள்ளதாகவும் பாஜக இன்னும் ஒரு வாரத்தில் ஆட்சி அமைக்க உள்ளதாக பாஜக தெரிவித்தது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, “கூட்டணி பிளவால் பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாக வந்த தகவல் தவறானது. காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியின் கூட்டணியில் எந்த ஒரு குழப்பமும் கிடையாது. முதல்வர் குமாரசாமி மற்றும் துணை முதல்வர் பாரமேஸ்வரா ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்குள் எந்த கருத்து வேற்றுமையும் கிடையாது.

வரும் 2019 ஆம் வருட மக்களவை தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் பாஜக பரப்பும் பொய்த் தகவல்கள் ஆகும். பாஜகவுக்கு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணி புரிய பிடிக்கவில்லை. ஆகவே பொய் தகவல்களை பரப்பி ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.