லண்டன்:

விடிய விடிய ரூ. 7 லட்சத்துக்கு மது குடித்தும் போதை ஏறவில்லை என லண்டனில் உள்ள ஓட்டல் ஒன்றின் மீது எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் வால்தாஸ் ஆம் ஸீ ஓட்டல், விலை உயர்ந்த மது வகைகளுக்கு பிரபலமானது. இங்கு மிகக் குறைந்த மது பாட்டிலின் விலையே இந்திய மதிப்பில் ரூ. 2,00,000க்கும் அதிகம்.

இந்த நிலையில் அந்த ஓட்டலுக்கு வந்தார் சீன எழுத்தாளர் ஜாங் வேய்.  அங்கிருக்கும் மதுவகையிலேயே மிக விலை உயர்ந்த்தை அருந்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

அவருக்கு ஒரு பாட்டில் விஸ்கி கொடுக்கப்பட்டது. அதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சம்!

இது கடந்த 1878ல் செய்யப்பட்ட பாரம்பரியமான மது என்பதால் இவ்வளவு விலை என்று தெரிவிக்கப்பட்டது.

எழுத்தாளர் ஜாங் வேய்யும், அதை வாங்கி அருந்த ஆரம்பித்தார். விடிய விடிய முழு பாட்டிலையும் (கொஞ்சம் மட்டும் மீதி!) குடித்தார்.

கடும் ஆத்திரத்துக்கு உள்ளானார். காரணம், கிட்டதட்ட முழு பாட்டில் விஸ்கியைக் குடித்தும் போதையே ஏறவில்லை என்றார். உயர்ந்தவகை மது என்று போலியான மதுவைக் கொடுத்துவிட்டதாக ஓட்டல் நிர்வாகத்தைச் சாடினார்.

அவரது எதிர்ப்பை ஓட்டல் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

வெளியேறிய ஜாங் வேய், மீத மிருந்த மதுவை சோதனைச்சாலையில் கொடுத்த சோதனை செய்தார். அது போலியான மது என்பது சோதனையில் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த ஓட்டல் மீது வழக்கு தொடுக்கப்போவதாக ஜாங் வேய் அறிவித்தார். அங்கு போலியான பொருள் விற்றால் கடும் தண்டனை உண்டு. ஆகவே பயந்துபோன ஓட்டல் நிர்வாகம், ரூ. 7 லட்சத்தை ஜாங் வேய்க்கு திருப்பித் தருவதாக கூறியது.

ஆனால் ஜாங் வேய், தான் ஏமாற்றப்பட்டதற்கு நட்ட ஈடும் அளிக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் வழக்கு தொடருவது நிச்சயம் என்றும் பெரும் தொகை கோரியிருக்கிறார்.

இப்போது ஓட்டல் நிர்வாகம்  என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது.