பேட்மின்டன் பற்றிய அறிதல் அரசுக்கு இல்லை: தலைமைப் பயிற்சியாளர்

பேட்மின்டன் விளையாட்டிற்கு இந்திய அரசு உதவிகரமாக இருந்தாலும், அந்த விளையாட்டைப் பற்றிய அறிதல் அரசுக்கு இல்லாமல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் பேட்மின்டன் தேசிய தலைமைப் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த்.

அவர் கூறியுள்ளதாவது, “சுவிட்சர்லாந்தில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது ஒரு புதிய மைல்கல். இதுபோன்று, சுதிர்மான் கோப்பை, தாமஸ் கோப்பை, உபேர் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டியுள்ளது.

பிவி சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோருக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படியான வீரர்களை நாம் உருவாக்கவில்லை. சாய்னா நேவால் மற்றும் சிந்து ஆகியோருடன் நான் அதிகநேரம் செலவிட்டுள்ளேன். இவர்கள் இருவர் தவிர, கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரநீத், செளரப் வர்மா, சமீர் வர்மா, பாருபல்லி கஷ்யப் மற்றும் பிரனோய் போன்றோரிடம் நான் நேரம் செலவிட்டுள்ளேன்.

ஆனால், அடுத்த தலைமுறை வீரர்கள்? பயிற்சியாளர்கள் எங்கே? என்பதுதான் எனது கேள்வி. இதேநிலை நீடித்தால் பேட்மின்டன் விளையாட்டின் எதிர்காலம் சொல்லிக்கொள்ளும் வகையில் இருக்காது. தற்போதைய நிலையில், ஏராளமானனோர் இந்த விளையாட்டை கட்டுப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

நமக்கு பொறுப்பு தேவை. தரமான வீரர்களைக் கண்டறிய நமக்கு ஒழுங்கமைப்பான மற்றும் கட்டமைக்கப்பட்ட செயல்திட்டம் தேவை. தற்போதைய நிலையில் பல அகடமிகளின் நிலை சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. நம்மிடம் இருக்கும் தேர்வுக் கமிட்டிக்கு நீண்டகால ஆர்வம் இல்லை.

இதனால்தான், கடந்த 2 ஆண்டுகளாகவே நம்மால் முக்கியப் போட்டிகளுக்கு தரமான அணிகளை அனுப்ப இயலவில்லை. நிறைய நிதி வருகிறது. அதேசமயம் நிறைய குழப்பங்களும் இருக்கிறது. எனவேதான் நமக்கு முறையான கட்டமைப்பு வேண்டியிருக்கிறது.

தேர்வு கமிட்டியில் எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. எனது பதவி ஒரு அலங்கார பதவியாக உள்ளது. இங்கே அனைவருமே பயிற்சியளிக்கிறார்கள். அதுதான் சிக்கலே. இயக்குநர், தலைமைப் பயிற்சியாளர், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான பயிற்சியாளர், ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான பயிற்சியாளர், ஜுனியர் பயிற்சியாளர் உள்ளிட்ட பல நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

தரமான மற்றும் போதுமான அதிகாரங்கள் வழங்கப்பட்ட பயிற்சியாளர்கள் நமக்குத் தேவை. நம்மிடம் இந்திய விளையாட்டு ஆணையம் இருக்கிறது, விளையாட்டு அமைச்சகம் இருக்கிறது. அவர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கின்றன. ஆனால், அவர்களுக்கு பேட்மின்டன் குறித்த அறிதல் இல்லை. இதையெல்லாம் நான் சொல்லவில்லை என்றால் வேறு யாரும் சொல்லமாட்டார்கள்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தலைமை பேட்மின்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த்.