டில்லி:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால், அதற்கான நிதி வழங்கப்படாது என்று மக்களவையில் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல், பல்வேறு காரணங்களை சாக்குப்போக்காக கூறி மாநில அரசு தட்டிக்கழித்து வருகிறது. இதன் காரணமாக உள்ளாட்சிகள் அனைத்தும் போதிய நிதியின்றி வளர்ச்சி பணிகள் முடங்கி உள்ளன.

இந்த நிலையில், இன்று கேள்வி நேரத்தின் போது மக்களவையில் திமுக உறுப்பினர் ஆ.ராசா  இது குறித்து பேசினார். அப்போது, பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை,  உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் எந்த திட்டம் என்றாலும் கமிஷன், வசூல், ஊழலே காணப்படுவதாக குற்றம்சாட்டினார்.

அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கும் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாவிட்டால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.