தற்போதைய கொரோனாவிற்கு எதிரான போரில் வெல்ல, மக்களின் பெரும்பாலானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற வேண்டும் என்பதே யதார்த்தமான வழிமுறை. இதை ஒன்றிணைந்த நோய் எதிர்ப்பு சக்தி எனலாம். ஆனால், அதை எப்படி அடைவது என்பதே அனைவரின் முன் நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி ஆகும்.
2௦2௦ ஆம் ஆண்டின் ஜனவரி மாத ஆரம்பத்தில், சீனா ஹூபே மாகாணத்தில் 50 மில்லியன் மக்களை தனிமைப்படுத்தியது. அதன் பின், பல்வேறு நாடுகளும் தீவிரமான, கடுமையான கட்டுபாடுகளை, கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் தன்னார்வமாக கடைபிடித்தான. மார்ச் மாத மத்தியில், கிட்டத்தட்ட அனைத்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓ.இ.சி.டி) சார்ந்த நாடுகளும், பள்ளி, பல்கலைக்கழகம், பணியிடங்கள் மற்றும் பொது போக்குவரத்து ஆகிய அனைத்தையும் மொத்தமாக முடக்கின. மேலும், பொது நிகழ்வுகள், மத நிகழ்வுகள் என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டன.  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால், ஒரே ஒரு மேற்கத்திய நாடு மட்டும் அவை அனைத்துக்கும் விதிவிலக்காக இருந்தது.
நாட்டின் செயல்பாடுகளை முடக்குதல் அல்லது அவசரகால நிலையை பிரகடனம் செய்வதற்கு பதிலாக, ஸ்வீடன் தனது குடிமக்களை பெரும்பாலும் தன்னார்வ அடிப்படையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியது. கொரோனா பரவலின் வளர்சியைக் காட்டும் வரைபடத்தில், அதன் வளர்ச்சியைத் தட்டையாக்கும் நடவடிக்கைகளை ஸ்வீடன் அதிகாரிகள் விவாதித்து முடிவெடுத்தனர். உதாரணமாக, பொதுக்கூட்டங்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க தடை, மதுபான விடுதிகள் மூடப்படுதல், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தொலைதூரக் கல்வி மற்றும் பல. ஆனால், இவற்றை நடைமுறைப்படுத்துவதில் கடுமை காட்டுவதையும், அபராதம் மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் ஆகியவற்றையும் தவிர்த்தனர். ஸ்வீடன் நாட்டு குடிமக்கள் தங்களின் நடவடிக்கையை தன்னார்வமாக மாற்றிக் கொண்டனர். அது அதி தீவிரமாக இல்லை என்றாலும், (உணவகங்கள், பள்ளிகள் செயல்பட்டன) மக்கள் கட்டுபாட்டுடன் இருந்தனர். அண்டை நாடான நார்வே (மற்றும் சில ஆசிய நாடுகளுக்கு) மாறாக, ஸ்வீடன் தனது மக்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது பயன்பாடுகளை உபயோகப்படுத்தவில்லை. இதனால் மக்களும் அந்தரங்கத் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட செயல்களுக்கான அச்சுறுத்தல்கள் தவிர்க்கப்பட்டது.

ஸ்வீடன் அதிகாரிகள், அவர்களின் நடவடிக்கைகளை, ஒன்றிணைந்த நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான இலக்காக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, ஏனெனில், 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்படும்போது மட்டுமே அதை அடைய முடியும் என  பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதினர். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அரசாங்கத்தின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது அல்லது விளைந்த பாதிப்புகள், அவர்களின் கட்டுபாடுகள் இல்லாத நடவடிக்கைகளின் விளைவாக இருக்கலாம். ஸ்வீடனின் பொது சுகாதார அமைப்பின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் கூறும்போது, “இந்த மாத தொடக்கத்தில் ஸ்டாக்ஹோம் நகரம் ஒன்றிணைந்த நோய் எதிர்ப்பு சக்தியை அடையக்கூடும்” என்று கணித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட நடத்தை விதிகளின் அடிப்படையில் (சமூக-இடைவெளி விதிமுறைகள் மக்களின் நடத்தையைப் பொறுத்து  மாற்றப்பட்டுள்ளன) ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக கணிதவியலாளர் டாம் பிரிட்டன், 40% நோய் எதிர்ப்பு சக்தி வைரஸ் பரவுவதைத் தடுக்க போதுமானதாக இருக்கும் என்றும் ஜூன் மாத மத்தியில் இது நிகழக்கூடும்” என்றும் கணக்கிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை சரிவில் இருந்து காத்துக் கொண்டது, தன் தனிநபர் இறப்பு விகிதத்தை பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து நாடுகளை விட குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொண்டது என தனிப்பட்ட முறையில் ஸ்வீடன் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. ஆனால், மற்ற நார்டிக் நாடுகளின் தனிநபர் இறப்பு விகிதங்களை விட அதிகமானதாக இருப்பதற்கும்,  குறிப்பாக, அதன் வயதான மற்றும் புலம்பெயர்ந்த மக்களைப் பாதுகாக்கத் தவறியதற்காகவும், ஸ்வீடன் விமர்சனத்திற்கு உள்ளானது. மருத்துவ மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளைப் பெற்று வந்த மக்களே, கொரோனா தொற்றினால் இறந்தவர்களில் பெரும் பகுதியினர் ஆவர். ஏனெனில், முகக்கவசம் அணிவது போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் மெதுவாக செயல்படுத்தப்பட்டன. மேலும், புலம்பெயர்ந்தோரும் இறப்பு விகிதத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் இருந்து, சேவை துறையில் பணியாற்றுபவர்கள்.  எனவே, வீடுகளில் இருந்து பணி புரிவது அவர்களுக்கு சாத்தியமற்றதானது. ஆனாலும், ஸ்வீடன் அதிகாரிகள் நாட்டின் அதிக இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருப்பதாக கூறுகின்றனர். உலகின் பல நாடுகளில், வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடையும். ஒரு பெரும் பகுதி மக்கள் இறுதியில் பாதிக்கப்படுவார்கள். மேலும், உலகின் பல நாடுகள் ஒரு கொடிய இரண்டாவது சுற்று கொரோனா பாத்ப்பைப் பெறும். தற்போதைய நிலை சீராக இருந்தாலும், இந்த பின்னரான கொரோனா பாதிப்பு சுவீடனுக்கும் இருக்கும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

ஸ்வீடனின் கொரோனாவுக்கான பதில் நடவடிக்கைகள் துல்லியமானது அல்ல. ஆனாலும், இது இளைஞர்கள் மற்றும் உடலளவில் ஆரோக்கியமானவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வெற்றிபெற்றுள்ளது. அதிக அபாயத்தில் இருந்தும், குறைவான பாதிப்பு கொண்டவர்களும் வளர்ச்சியைக் காட்டும் வரைப்படத்தில், வளர்ச்சியை தட்டையாக்கியத்தில் பங்கு வகித்துள்ளனர். நாட்டின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் மருத்துவ வசதிகள், உபகரணங்கள் பற்றாக்குறை நிகழவில்லை. மருத்துவமனை ஊழியர்கள், சிரமத்திற்குள்ளாகி இருந்தாலும், குறைந்தபட்சம் குழந்தை பராமரிப்புப் பொறுப்புகளைக் கூடுதலாக கையாள வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஏனெனில், பள்ளிகளும், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
ஸ்வீடன் மக்கள் விரும்பியோ அல்லது விருப்பமின்றியோ, அவர்களது அரசின் முயற்சிகளை ஏற்றுக் கொண்டனர். தற்போது, இன்னும் பல நாடுகள் ஸ்வீடனின் அணுகுமுறை மற்றும் அதன் அம்சங்களை பின்பற்ற முயற்சிக்கின்றன. டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய இரண்டும் சிறு குழந்தைகளுக்கான பள்ளிகளை மீண்டும் திறந்துள்ளன. ஜெர்மனி சிறிய கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கிறது. இத்தாலி விரைவில் பூங்காக்கள், விவசாயிகளின் சந்தைகள் மற்றும் சிறிய அருங்காட்சியகங்கள், பள்ளிகள் மற்றும் தினப்பராமரிப்பு மையங்கள் உள்ளிட்ட சில அத்தியாவசியமல்லாத வணிகங்களை மீண்டும் திறக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. இதுவரை, இருப்பதிலேயே, மிக அதிகமான COVID-19 இறப்புகளைக் கொண்ட அமெரிக்காவில், பல மாநிலங்கள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வற்புறுத்தலின் பேரில் கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டிருக்கின்றன. அதாவது, அவர் ஸ்வீடன் நாட்டு நடவடிக்கைகளை முன்மாதிரியாகக் கொண்டே, தன் நடவடிக்கைகளை அமைத்துள்ளார்.

உலக நாடுகள் தங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்க பல காரணங்கள் உள்ளன. நேர்ந்துள்ள மொத்த இறப்புகள், கடன் செலுத்த இயலாமை, பணிநீக்கங்கள், தற்கொலைகள், மனநலப் பிரச்சினைகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் முதலீடுகளின் இழப்புகள் என இழப்புகளை மட்டுமின்றி, வைரஸை எதிர்த்துப் போராட பயன்படுத்தப்படும் நடவடிக்கைகள் போன்றவற்றின் மதிப்புகளை கணக்கிடவும், சரி செய்யவும் பல ஆண்டுகள் ஆகும். எவ்வாறாயினும், இதுவரை ஏற்பட்டுள்ள முடக்கம் மற்றும் பொருளாதார மற்றும் சமூக இழப்புகள் கணக்கிட இயலாதவை. ஓ.இ.சி.டி.யின் மதிப்பீடுகளின்படி, ஒவ்வொரு மாதமும் தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகள் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரத்தை 2% அளவுக்கு சரியச் செய்யும் என்று கூறுகின்றன. ஓ.இ.சி.டி கருத்தின்படி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா ஆகியவை ஒரு வருடத்திற்குள் தங்கள் பொருளாதாரம் 25% அளவுக்கும் மேலாக சரிவதைக் காணும். 1930-களில் இருந்து கேள்விப்படாத அளவிற்கு வேலையின்மை உயர்ந்து வருகிறது. இது அரசியல் ரீதியாகவும், சமூக அளவிலும் பெரும் சிக்கல்களை உண்டாக்கியுள்ளது.
ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கப்படும் வரை, கொரோனாவைக் கட்டுப்படுத்த மொத்தமாக முடக்குதல் என்பது ஒரு நிலையானத் தீர்வாக இருக்க முடியாது. ஏனெனில், முடக்குதலை தளர்த்துதல் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்களைக் குறைக்கும். மேலும், இதன் மூலம் மக்கள் ஒன்றிணைந்த நோய் எதிர்ப்பு சக்தியை பெற வழிவகை செய்யக் கூடும். ஆனால், இது நீண்ட காலத்திற்கு COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான மோசமான வழியாக இருக்கும். இதுவரை முடக்கப்பட்டிருந்த நாடுகள் கடுமையான, தீவிரமான இரண்டாவது சுற்று கொரோனா தாக்குதலை எதிர்க் கொள்வார்கள். ஏனெனில், நாம் இன்னும் கொரோனாவைப் பற்றி முழுமையாக தெரிதிருக்கவில்லை.  அதே சமயம், இந்த நாடுகள் ஒன்றிணைந்த நோய் எதிர்ப்பு சக்திக்கான ஸ்வீடனின் பாதையை பின்பற்றினால், தொற்றுநோயின் விளைவுகள் குறையும், அது மேலும், விரைவில் ஒரு முடிவுக்கு வரும்.
COVID-19-க்கான ஸ்வீடனின் அணுகுமுறை அந்த நாட்டின் தனித்துவமான கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கிறது, மேலும் அதன் அம்சங்களை வேறு ஒருவர் நகலெடுப்பது போன்று பின்பற்றுவது அவ்வளவு எளிதல்ல. குறிப்பாக, உத்தியோகபூர்வ பரிந்துரைகள் மற்றும் மக்களின் தனிப்பட்ட பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடுவது ஸ்காண்டிநேவியாவுக்கு அப்பால் சாத்தியமில்லை. ஸ்வீடன் என்பது ஒரு விதிவிலக்கான சிறப்பு நாடு. இது மக்களிடையே மட்டுமல்ல, மக்களும் அரசாங்க நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று அதிக அளவிலான நம்பிக்கையால் இணைந்துள்ளன. பிறநாடுகளின் குடிமக்கள் போலல்லாமல், அரசின் பரிந்துரைகளை, ஸ்வீடன் குடிமக்கள் தன்னார்வத்துடன் பின்பற்றி தீவிரமாக செயல்படுவார்கள் என அரசு முழுமையாக நம்பியது.
ஸ்வீடன் மக்கள் இயல்பாகவே, மற்ற நாட்டு குடிமக்களை விட ஆரோக்கியமானவர்கள. எனவே உலகின் பிற பகுதிகளில் உள்ள பலவீனமானவர்களைப் பாதுகாக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவைப்படலாம். முதியவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரைப் பொறுத்தவரையில் ஸ்வீடனின் தவறான அணுகுமுறை மற்றும் வழிகாட்டுதல்களிலிருந்து, பிற கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்திருக்கும் நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். முகக்கவசங்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் உடனடியாக மருத்துவமனைகளில் கிடைக்கச் செய்ய வேண்டும். மேலும் அதிக ஆபத்தில் இருக்கும் சேவைத் துறை ஊழியர்களைப் பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அதிக வயதுடையவர்கள் அல்லது பலவீனமானவர்களையும்,  முழு சமூகத்தையும் முடக்காமல் காக்க வேண்டும். அதே சமயம் அபாயத்தில் இருக்கும் நபர்கள் பாதுகாப்பாகவும், தீங்கு விளைவிக்கும் வழியில் இல்லாமல் இருக்கவும் உதவ வேண்டும்.
விஞ்ஞானிகள் வைரஸைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள பணியாற்றிக் கொண்டிருக்கும் அதே வேளையில், தொற்றுநோயைச் சார்ந்து புதிய மற்றும் சிறந்த வழிகளை அதிகாரிகள் உருவாக்குகிறார்கள். நடத்தை விதிகள் மற்றும் அதில் மாற்றங்களை செய்து அதிலிருந்து ஒன்றிணைந்த நோய் எதிர்ப்பு சக்தியைக் கணக்கிடுவதற்கான காரணிகளை பெறுவது அதில் ஒன்று ஆகும். எடுத்துக்காட்டாக, மேற்கத்திய நாடுகளில், பொது முடக்கத்திற்கான காரணம் மிகவும் பலவீனமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட பாதிக்கப்படும் அபாயத்திற்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை மிகப்பெரியது. இருந்தாலும், இவர்களை கட்டாயமாக முடக்கி வீட்டில் இருக்கவைப்பதற்கு ஆகும் செலவு, அவர்களை நேரடியாக பாதுகாக்க ஆகும் செலவை விட அதிகமாகவே இருக்கும். ஒன்றிணைந்த நோய் எதிர்ப்பு சக்தியை அடையும் வழிகளை உருவாக்குவது மற்றும் நிர்வகிப்பது என்பது பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பவர்களை பாதுகாப்பதாகும். ஸ்வீடன் இதை ஒரு கடினமான வழியில் கற்றுக்கொண்டாலும், இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.
தேசிய அளவிலான முழுமையான முடக்குதல் உருவாக்கும் வலி என்பது  சகிக்கமுடியாததாகும். எனவே முழுமையாக முடக்கி பின்னர் அது தோல்வி அடைவதை விட, அதை சிறந்த முறையில் நிர்வகிப்பது என்பது ஒரே யதார்த்தமான வழி என்பதை உலக நாடுகள் தற்போது உணர்ந்துக் கொள்ள ஆரம்பித்துள்ளன. எனவே, பெரும்பாலான நாடுகள், கட்டுபாடுகளை தளர்த்தத் தொடங்கும். மருத்துவம் சார்ந்த பற்றாக்குறைகளை தவிர்க்க திறன் வாய்ந்த சமூக இடைவெளி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் பாதிப்பு அபாயத்தில்  இருப்பவர்களுக்கு சிறந்த பாதுகாப்பு ஆகியவை மக்களிடையே பாதிப்பு அளவைக் குறைக்கும். ஆனாலும்,  இறுதியில் பாதிப்பு அதிகரித்து, ஒன்றிணைந்த-நோய் எதிர்ப்பு சக்தி சாத்தியப்படும். இது அனைவருக்கும் பாதுகாப்பாகவும் இருக்கும். அதே சமயம், பாதிக்கப்படக்கூடிய அபாயத்தில் இருப்பவர்களும் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். கொரோனா தொற்றுநோயை நிர்வகிக்க மதிப்பெண் வழங்கினால், ஸ்வீடன் அதிக மதிப்பெண்களுடன் முன்னணியில் இருக்க தகுதி பெற்றது. அதை உலக நாடுகளும் உணரத்தொடங்கியுள்ளன.
English: Nils Karlson, Charlotta Stern, and Daniel B. Klein
தமிழில்: லயா