அகமதாபாத்: குஜராத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக 4 நகரங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

குஜராத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் ஊரடங்கை அரசு திணிக்காது என்று முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்திருந்த நிலையில் சில நகரங்களுக்கு மட்டும் வார இறுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாதில் வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு இன்று இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணிவரை அமலில் இருக்கும் என முன்பே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் துணை முதல்வர் நிதின் பட்டேல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: ராஜ்கோட், சூரத் மற்றும் வதோரா நகரில் நவம்பர் 21ம் தேதி இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கை மீறி மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு உள்ளது.