பனாஜி:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த மாதம் 14ந்தேதி வரை, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கோவா மாநிலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளான  பால், ரோட்டி, மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், கோவாவில் வசிப்பவர் கோவாவில் உள்ள பம்பாய் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார், இதுகுறித்த விசாரணையைத் தொடர்ந்து, மாநில அரசை கண்டித்த நீதிமன்றம், இந்த விஷயத்தை உடனே கவனிக்க உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் முதலில் ஒருநாள் சுய ஊரங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கோவா பாஜக அரசு, இந்த ஊரடங்கு மேலும் 3 நாள் நீட்டித்து அறிவித்து. இதற்கிடையில், கடந்த 22ந்தேதி முதல் ஏப்ரல் 14ந்தேதி வரை நாடு முழுவதும்  21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மத்தியஅரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, பால், மருந்து, மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் தடை இல்லை என அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் பல இடங்களில், போக்குவரத்து தடை காரணமாக உணவுப் பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

இதன் காரணமாக கோவாவில் அத்தியாவசியப் பொருட்களான, பால், ரொட்டி போன்ற உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநில அரசு இதற்கான நடவடிக்கையில் தோல்வி அடைந்துள்ளதாகவும், ஆளுநர் அலுவலகம் இதில் தலையிட வேண்டும் என்றும், மாநில முதல்வர் சாவந்த் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும்  எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்துள்ளன.

இதற்கிடையில் குடியிருப்பு சங்கத்தை ஒரு குழு  உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிமன்றத்தில், மாநில அரசு சார்பில், மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்காக “சில செயல் திட்டங்களை” அமல்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து கூறிய மாநில முதல்வர் சாவந்த், பிரதமருடன் அழைப்பு வரும் வரை தொற்றுநோயின் தீவிரத்தை உணரவில்லை என்றும்,  “இதற்கு முன்னர் அதன் தீவிரத்தை நாங்கள் அளவிடவில்லை, மோடிஜியுடனான வீடியோ மாநாட்டிற்குப் பிறகு, அதன் தீவிரத்தை [நாங்கள்] உணரத் தொடங்கினோம் என்று தெரிவித்தவர்,

“சிக்கல் இருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், இதை நான் அறிவேன். மக்கள் சரியான நேரத்தில் பொருட்களைப் பெறுவதில்லை என்பதையும் நான் கவனிக்கிறேன். நியாயமான விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்புவதையும், வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், பசியால் வாடும் மக்களின் அவலநிலை குறித்து தெரிவிக்க உதவுவதற்காக உணவுக்கான ஹெல்ப்லைன் எண்ணையும் அறிவித்தார். மேலும்,  தன்னார்வலர்கள் பசியால் வாடும் மக்களுக்கு உணவை வழங்குவர் என்றும் தெரிவித்து உள்ளார்.