சென்னை,

மிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பாலில் ரசாயணம் கலக்கப்பட்டு உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து பால் சோதனைக்காக புனே ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆனால், புனே ஆய்வகம் தமிழக அரசிடம் இருந்து இதுவரை ஆய்வுக்காக பால் எதுவும் வரவில்லை என்று கூறி உள்ளது.

இதன் மூலம் அமைச்சரின் பேச்சு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தனியார் பால் நிறுவனங்கள் கூறி உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தனியார் பால் நிறுவனங்கள் பால் கெட்டுப்போகாமல் இருக்கு அதிக அளவு ரசாயணம் கலப்பதாக புகார் கூறினார்.

இதன் காரணமாக பொதுமக்களுக்கு கேன்சர், நீரழிவு நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பல்வேறு உடல் நலக்குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கலப்பட பாலை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த பிரச்சினை பெரும் பூதாகாரமாக எழுந்தது. அதைத்தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தன.

அதைத்தொடர்ந்து முதல்வரும் தனியார் பாலில் ரசாயணம் கலந்திருப்பது உறுதியானால், அவர்களின் லைசென்சை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறியதாக அமைச்சர் தெரிவித்திருந்தபார்.

மேலும், மாதவரம் பால் பண்ணை ஆய்வக கூடத்தில் தனியார் பால்களை  பரிசோதனை செய்தபோது, அதில் ரசாயணம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது.

தற்போது தனியார் நிறுவன பால்களை சோதனைக்காக  புனே, கிண்டியில் உள்ள ஆய்வகங்க ளுக்கு அனுப்பி உள்ளதாகவும், அதன்  முடிவுகளையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையிலல், தமிழகத்தில் இருந்து ஆய்வுக்காக பால் மாதிரி எதுவும் அனுப்பப்படவில்லை என புனேவில் உள்ள மத்திய உணவு ஆய்வகத்தின் இயக்குனர் பத்கரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் இருந்து கடந்த 2016ம்  ஆண்டு ஜூன் 14ம் தேதி பால் மாதிரி ஆய்வுக்காக அனுப்பப்பட்டதாகவும், அதற்கு பிறகு கடந்த ஓராண்டாக எந்த ஒரு பால் மாதிரியும் தமிழகத்தில் இருந்து ஆய்வுக்காக அனுப்பப்படவில்லை.

ஈரோட்டைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சார்பில் கடந்தாண்டு அனுப்பப்பட்ட தனியார் பாலில் எந்த ஒரு ரசாயனப் பொருளும் கலக்கப்படவில்லை என்று ஆய்வின் முடிவில் தெரிய வந்ததாகவும் அவர் கூறி உள்ளார்.

புனே ஆய்வகத்தின் தலைவர் பத்கரேவின் பதில் தற்போது வெளியாகி உள்ளது.

ஆனால், தமிழக அமைச்சர் புனே ஆய்வகத்துக்கு சோதனைக்காக பால் அனுப்பப்பட்டதாக கூறியிருந்தார்.

இதிலிருந்து தமிழக அமைச்சரின் குற்றச்சாட்டு பொய் என்றும், அமைச்சர் எதையோ எதிர்பார்த்து தனியார் பால் நிறுவனங்கள்மீது குற்றச்சாட்டு கூறியுள்ளதாக தனியார் பால் நிறுவனங்கள் கூறி வருகின்றன.