பிரியாணிக்கு தடை: பாகிஸ்தான் வீரர்களுக்கு அதிரடி உணவு கட்டுபாடுகளை விதித்த புதிய பயிற்சியாளர்!

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் (Misbah-ul-Haq) நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், வீரர்களுக்கு பல்வேறு உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக பிரியாணி, பர்கர் போன்ற உணவுகள் சாப்பிட வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது.  பயிற்சியாளராக இருந்த மிக்கி ஆர்த்தர் நீக்கப்பட்டு புதிய பயிற்சியாளராகவும், தேர்வுக்குழுத் தலைவராகவும் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டார். அதுபோல, புதிய பந்து வீச்சு பந்துவீச்சுப்பயிற்சியாளராக வக்கார் யூனுஸ் அமர்த்தப்பட்டார்.

உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கொட்டாவி விட்ட காட்சியும், முதல்நாள் இரவில் பாகிஸ்தான் வீரர்கள் ஹோட்டலுக்குச் சென்று பர்கர், பீட்சா சாப்பிட்டதும் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது அனைவரும் அறிந்ததே.

இதன் காரணமாக, இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி வீரர்கள் உடல் தகுதியுடன் இருக்க பல்வேறு நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது.  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் வகையில், பிரியாணி, ஸ்வீட், பர்கர், அதிக கொழுப்பு கொண்ட மாமிசங்கள்  உண்ண தடை விதிப்பதாக, மிஸ்பா உல் ஹக் அறிவித்து உள்ளார்.

மேலும், உள்நாட்டு பருவத்தில் அனைத்து அணிகளுக்கும் மெனுவில் பார்பிக்யூ பொருட்கள் மற்றும் நிறைய பழங்களைக் கொண்ட பாஸ்தா மட்டுமே இருக்க வேண்டும் என்று மிஸ்பா உத்தரவுகளை பிறப்பித்துள்ளார், அதே நேரத்தில் தேசிய முகாம்களிலும் அதே உணவு திட்டம் பின்பற்றப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த உணவு கட்டுப்பாடானது, தேசிய அணிக்கு மட்டுமல்லாமல், உள்ளூர் போட்டிகளிலும் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது

மிஸ்பா உல் ஹக் பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி வரும் 27-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.