தமிழகத்துக்கு இந்த மாதம் தண்ணீர் கிடையாது : குமாரசாமி

பெங்களூரு

மிழகத்துக்கு இந்த மாதத்துக்கான காவிரி நீர் கொடுத்து விட்டபடியால் இனி தண்ணீர் திறந்து விடப்பட மாட்டாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்ததால் கபினி மற்றும் கே ஆர் எஸ் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.    அதனால் காவிரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது.    கபினி அணையில் இருந்து முதலில் வினாடிக்கு 35000 கன அடி திறக்கப்பட்ட நீர் பிறகு 15000 ஆகவும் அதன் பிறகு 1000 ஆகவும் இறுதியில் 500 ஆகவும் குறைக்கப்பட்டது.   தற்போது தமிழகத்து நீர் நிறுத்தப்பட்டுள்ளது.  அதற்கு பதில் கர்நாடக விவசாயிகளுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமி, “இந்த மாதம் தமிழகத்துக்கு திறக்கப்பட வேண்டிய அளவு காவிரி நீர் திறக்கப்பட்டு விட்டது.    நடுவர் மன்றம் ஏற்கனவே ஜூன் மாதம் திறக்க வேண்டிய நீரின் அளவை அறிவித்திருந்தது.   அதன் படி முழுமையாக திறக்கப்பட்டு விட்டது.   அதனால் இனி இம்மாதம் நீர் திறந்து விடப்பட மாட்டாது.

கபினி அணை முழுவதுமாக நிரம்பி உள்ளதால் கர்நாடக மாநில விவசாயப் பணிகளுக்கான நீர் திறந்து விடப்பட்டுள்ளது.    இம்மாநில விவசாயிகளை  காக்க வேண்டிய கடமையும் எனக்குள்ளது.    இதுவரை காவிரி மேலாண்மை ஆணையம் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.  அதற்காக நாங்கள் காத்திருக்க முடியாது.

முந்தைய தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின் படி நீர் திறந்து விட்டுள்ளோம்.    எங்கள் மாநிலத்தில் கரும்பு, நெல் ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது.  அதற்கான நீரை தற்போது திறந்துவிட்டுள்ளோம்.    இந்த நடவடிக்கையால் சட்டரீதியான பிரச்னை வந்தாலும் சரி, தொழில்நுட்ப பிரச்னை வந்தாலும் சரி அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி