மற்ற மாநிலத்தவர்களுக்கு மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை கிடையாது: மம்தா

கல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் உள்ள அரசு  மருத்துவமனைகளில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு  இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள மாநில அரசு மருத்துவமனைகளில், மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலவசமாக  சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது என்று மாநில முதல்வர் மமதா பானர்ஜி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறினார்.

வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தங்கியிருந்த  இலவச சிகிச்சை மேற்கொள்வதால், நிதி இழப்பு ஏற்படுவதாக வும்,  மாநில அரசின் நிதி வரம்புகளை கருத்தில் கொண்டு, இனிமேல் வெளி மாநில மற்றும் வெளி நாட்டு நோயாளிகளுக்கு இலவச சிகிச்சையை அளிக்க முடியாது என்று மேற்கு வங்காள பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் ஆறாவது மாநாட்டில் கலந்துகொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

மேலும், அரசு மருத்துவமனைகிளில் இலவச சிகிச்சையைப் பெறும் நபர்களுக்கு ஒரு சிறப்பு அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்றும், இந்த அட்டை நமது மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்  என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க சுகாதாரத்துறை அதிகாரி, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் சுமார் 20 சதவிகிதம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், பெரும்பாலோர்  பீகார், ஜார்கண்ட், கிழக்கு உ.பி., பங்களாதேஷ் மற்றும் நேபாளத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறினார்.