30 வருடங்களாக இஸ்லாமிய எம் பி இல்லாத குஜராத்

கமதாபாத்

டந்த 30 வருடங்களாக குஜராத் மாநிலத்தில் இருந்து ஒரு இஸ்லாமியர் கூட மக்களவை உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்படவில்லை

அகமது படேல்

குஜராத் மாநிலத்தில் 9.5% மக்கள் இஸ்லாமியர்கள் ஆவார்கள்.   இந்த மாநிலம் அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக 1962 ஆம் வருடம் மக்களவை தேர்தலை சந்தித்தது.  அப்போது  பானஸ்கந்தா தொகுதியில் இருந்து ஒரே ஒரு இஸ்லாமியர் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார்.  அவர் பெயர் ஜோகரா சவுதா ஆகும்.

அதன் பிறகு நடந்த தேர்தல்களில் பல அரசியல் கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காமலே இருந்துள்ளனர்.   இதற்கு காங்கிரஸ் கட்சி மட்டுமே விதிவிலக்காக இருந்தது.  குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பாரூச் தொகுதியில் இஸ்லாமிய வாக்காளர்கள் 15.64 லட்சம் பெர் உள்ளனர்.

இஸ்லாமியர்கள் அதிகமுள்ள தொகுதியான பாரூச் தொகுதியில் கடந்த 1962 முதல் 8 இஸ்லாமிய வேட்பாளர்கள் தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டனர்.  அவர்கள் அனைவரும் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டுள்ளனர்.  இவர்களில் அகமது படேல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.  இவர் 1977, 1982 மற்றும் 1984 ஆகிய வருடங்களில் நடந்த மக்களவை தேர்தலில் பாரூச் தொகுதியில் வெற்றி பெற்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் கிரண் தேசாய், “குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் சமுதாயத்தில் மட்டுமின்றி அரசியலிலும் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.  இது 2002 கலவரத்துக்குப் பின் மிகவும் அதிகரித்துள்ளது. ” என வருத்தம் தெரிவித்துள்ளார்.   அவர் சொல்வது போல் பல இஸ்லாமியர்கள் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்ட போதும்  காங்கிரஸ் தவிர வேறு எந்த கட்சியும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.

குஜராத் மாநிலத்தில் இருந்து கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமியர் காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் ஆவார்.  இவர் கடந்த 1984 ஆம் வருடம் பாரூச் தொகுதி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஆனால் 1989 ஆம் வருடம் அதே தொகுதியில் 1.15 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.  கடந்த 30 வருடங்களுகும், மேலாக இதுவரை ஒரு இஸ்லாமியர் கூட மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படவில்லை.

Leave a Reply

Your email address will not be published.