“கட்டணம் திரும்பப்பெற வங்கிக் கணக்குகளை தெரிவிக்காதீர்” – எச்சரிக்கும் தென்னக ரயில்வே

சென்னை: ரயில் பயணிகள், தங்களது பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு, தங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்களை தெரிவிக்கக்கூடாது என்று தென்னக ரயில்வே எச்சரித்துள்ளது.

தென்னக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; பயணச்சீட்டு கட்டணத்தை திரும்பப்பெற பயணியரிடம் வங்கிக் கணக்கு விவரங்களை ரயில்வே நிர்வாகம் ஒருபோதும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை.

மோசடி கும்பலைச் சேர்ந்த சிலர் இதுபோன்ற தகவல்களை தொலைபேசி வாயிலாக கேட்பதாக புகார்கள் வருகின்றன. ரயில் பயணியர் மற்றும் பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக வங்கி ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு எண்கள், வங்கி பின் எண்கள், ஏடிஎம் பாஸ்வேர்டு ஆகியவைகளை தெரிவிக்க வேண்டாம்.

இந்திய ரயில்வே, உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளத்தின் மூலம் பதிவு செய்த பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தொகை பயணம் ரத்தாகும்போது பயணிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். ரயில் நிலையங்களில் பதிவு செய்யப்படும் பயணச் சீட்டுக்கான கட்டணம் உரிய காலக்கெடுவில் ரயில்வே ஸ்டேஷன்களில் திரும்ப வழங்கப்படுகிறது.

எனவே, தனிநபர் வங்கிக் கணக்கு சம்பந்தமான விஷயங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டியதில்லை. இந்த தகவல்களை யாராவது தொலைபேசியில் கேட்டால், இதுகுறித்து ரயில்வே பயணியர் உதவி தொலைபேசி எண் 138ல் புகார் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.