கோவை:  கோவை மாவட்டத்துக்கு முழு முடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கிறது. சென்னை உள்ளிட்ட4 மாவட்டங்களுக்கு வரும் 30ம் தேதி வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோவையிலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக இங்கும் முழு முடக்கம் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கோவை மாவட்டத்துக்கு முழு முடக்கம் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது:

கோவையில் வெளிமாநிலங்கள், மற்றும் மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் 17 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது,  அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஒவ்வொரு நாளும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலமாக 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. கோவையை பொறுத்தவரையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்த நாட்களிலிருந்து பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்ததால்,  உள்ளூர் மக்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தளர்வுகள் அடிப்படையில் இரு சக்கர வாகனங்கள், விமானங்கள் மற்றும் ரயில் சேவை உள்ளிட்டவை அனுமதிக்கப்பட்டுள்ளன. வெளியிலிருந்து வரக்கூடிய மக்கள் தங்களை பரிசோதித்து கொள்ளாமல் வருவதால்தான் இதுபோன்ற தொற்று பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.