டெல்லி:

விமானங்களில் நடு  இருக்கை காலியாக வைக்க தேவையில்லை என்று உத்தரவிட்ட மும்பை உயர்நீதி மன்ற உத்தரவை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது.

விமான போக்குவரத்து அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி விமானங்களின் நடு இருக்கையில் பயணிகளுக்கு அனுமதி வழங்கி மும்பை உயர் நீதிமன்றம்  ஏற்கனவே உத்தர விட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கில், மும்பை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கிலும் தொற்று பரவலை தடுக்கும் வகையிலும், விமான பயணத்தன்போது, விமானத்தினுள் உள்ள நடு இருக்கைகளில் பயணிகளை அனுமதிக்க வேண்டாம் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஆனால், அவ்வாறு செய்தால், விமான நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று கூறப் பட்டது.  இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின்போது,   விமான போக்குவரத்து அமைச்சகம் வகுத்துள்ள கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடித்து நடு இருக்கை பயணிக்கு (மூன்று பயணிகள் அமரும் வரிசையில்) அனுமதி அளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏர் இந்தியா விமான பைலட் தேவன் கனானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில்,  அனைத்து உள்நாட்டு விமானங்கள் மற்றும் சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை காலியாக விடுவதற்கு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விமான பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உடல்நலனை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியதுஅவசியம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம்.  அதேசமயம் விமான நிறுவனங்களின் செயல்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு நடு இருக்கை பயணிக்கு முழுமையான கவச உடை (டிஜிசிஏ வகுத்த விதிகளின்படி) அளிக்கப்பட வேண்டும். முழுமையான முகக் கவசமும் அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், முப்பை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.