தமிழக காங்கிரஸ் கட்சியில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது: கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய குழுக்களால் எந்த பயனுமில்லை என்று அக்கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை. 32 துணை தலைவர்கள், 57 பொதுச் செயலாளர்கள், 104 செயலாளர்கள் என்று நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது. அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பது இருக்காது என்று பதிவிட்டுள்ளார்.

பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான 24 பேர் கொண்ட காங்கிரசின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் கார்த்தி சிதம்பரம் இடம் பெற்றுள்ளார். பல்வேறு முக்கிய பொறுப்புகளில் அவரது தந்தையான ப. சிதம்பரமும் உள்ளார்.