புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மோடி அரசால் ரத்துசெய்யப்பட்டு, ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அப்பிராந்தியத்தில் எந்தவித புதிய அரசுப் பணிகளும் உருவாக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து நிலைகளிலும், சுமார் 10000 பணியிடங்கள் வரை, ஜம்மு-காஷ்மீரில் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளதாக கூறினார் மூத்த அதிகாரி ஒருவர். கொரோனா பரவல் காரணமாக, பணியமர்த்தல் செயல்பாடு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் அவர்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுவது தொடர்பான விவாதம் ராஜ்யசபையில் நிகழ்ந்தபோது, இனிமேல் அங்கே மேம்பாட்டு திட்டங்கள் நிறைய நடைபெறும் என்று தெரிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
ஆனால், இதுவரை அங்கே நிலைமை தலைகீழாகத்தான் உள்ளது. 4ஜி இணையதள சேவையே அம்மாநிலத்தில் இன்னும் மீட்கொணரப்படவில்லை. மனித உரிமைகள் எந்த நிலையில் உள்ளன என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முதற்கொண்டே, ஜம்மு-காஷ்மீர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், அதே ஆண்டு நவம்பர் மாதம் அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது.
உள்துறை அமைச்சக தகவலின்படி, அம்மாநிலத்தில் மொத்தம் 84000 பணிவாய்ப்புகள் உள்ளன. அதில் IV நிலையில் 22078 பணிவாய்ப்புகளும், கெஸட்டட் அல்லாத நிலையில் 54375 பணிவாய்ப்புகளும், கெஸட்டட் நிலையில் 7552 பணிவாய்ப்புகளும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.13600 கோடி மதிப்பில், 168 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அங்கே கையெழுத்திடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் ஷெய்க் ஆஷிஸ், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியிலிருந்து(சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட நாள்), ஜம்மு காஷ்மீரின் வர்த்த நடவடிக்கைகளில் ரூ.40000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். மேலும், அம்மாநிலத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவிப்பதாகவும் அவர் கவலை தெரிவிக்கிறார்.
“இந்த நிலை மாறும் என்று, மத்திய நிதியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் ஒரு சிறிய பொருளாதாரம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எங்களின் பங்களிப்பு வெறும் .77% மட்டுமே. எனவே, அரசிடமிருந்து தேவையான உதவி கிடைத்தால் மட்டுமே எங்களால் மீள முடியும்” என்பதும் அவரின் கூற்று.
நன்றி: த இந்து