பேரறிவாளனை விடுவிப்பதில் எங்கள் குடும்பத்துக்கு ஆட்சேபம் இல்லை!: ராகுல் காந்தி

ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை விடுவிப்பதில் தங்கள் குடும்பத்துக்கு ஆட்சேபம் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்த்திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் படங்கள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியிடம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து பா.ரஞ்சித்தை சந்திக்க விரும்பி ராகுல்காந்தி தகவல் அனுப்பினார்.

இதையடுத்து ராகுல் இல்லத்திற்கு பா.ரஞ்சித் சென்றார். இருவரும் சந்தித்து அளவளாவினார்கள்.

 

 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அதில் “திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்தித்தேன். தமிழில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களான மெட்ராஸ், கபாலி, காலாவை இயக்கியவர். உடன் நடிகர் கலையரசனையும் நேற்று சந்தித்தேன். நாங்கள் அரசியல், திரைப்படங்கள், சமுதாயம் பற்றி பேசினோம். இந்தச் சந்திப்பும் உரையாடலும் மகிழ்ச்சியளிக்கிறது, இதுபோன்ற பேச்சுகள் தொடரும் என எதிர்பார்க்கிறேன்  என ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்திப்பின்போது, ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனை விடுவிப்பதில் தங்கள் குடும்பத்துக்கு ஆட்சேபம் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்துவதற்காக பா.ரஞ்சித்தை தொடர்புகொண்டு பேசினோம். அவரும், ராகுல் அப்படிக்கூறினார் என்று தெரிவித்தார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், ராகுல்காந்தியின் கருத்து, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கை அதிகரிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.