டெல்லி:

ள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை என்று கூறி,  திமுகவின் குழப்பத்தை மீண்டும் உச்சநீதி மன்றம்  தெளிவுபடுத்தி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை என்றும், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், திமுக தரப்பில், மு.க.ஸ்டாலின், திமுக வழக்கறிஞர் வில்சன் ஆகியோர், உச்சநீதிமன்ற தீர்ப்புபடி, வார்ட ஒதுக்கீடு முறையாக பிரிக்கப்பட்ட பிறகே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது என்றும், அதனால் தேர்தல் நடைபெறாது என்றும், ஊடகங்களிடம் விளக்கம் தெரிவித்து வந்தனர்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு தடை கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதி மன்றம் கடந்த 6ந்தேதி  தீர்ப்பு வழங்கியது. அதன்படி, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உத்தரவிட்டது. அதையடுத்து மாநில தேர்தல், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.

இந்த நிலையில்,  உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில சந்தேகங்கள் உள்ளதாக கூறி திமுக தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில்  முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ‘irrespective’ என்ற ஒரு வார்த்தை உள்ளது குறித்து திமுக சந்தேகம் எழுப்பி வந்தது. இதுகுறித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் திமுக வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இன்று விளக்கம் கோரினார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, திமுக ஊடகங்களில் உச்சநீதி மன்றம் தேர்தலை நிறுத்திவிட்டது என்று கூறி வருவதாக  குற்றம் சாட்டினார். இதை கேட்ட நீதிபதி, முறையீட்டை விசாரிக்கவும் உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிடவும் நாங்கள் விரும்பவில்லை என்று கூறினார்.

இதன் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

தீர்ப்பில் கூறப்பட்டிருந்த ‘irrespective’ என்ற ஒரு வார்த்தை காரணமாக, உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதித்துள்ளது என்றும்  ஊடங்கங்கள் முன்பு திமுக தெரிவித்து வந்தது, தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.