புதுடில்லி: காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர்களை “தேச விரோதிகள்” என்று அரசாங்கத்தில் யாரும் இதுவரை அழைக்கவில்லை, என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய அதேவேளை அவர்கள் விடுதலை குறித்து யூனியன் பிரதேச நிர்வாகத்தால் ஒரு முடிவு எடுக்கப்படும், என்றார்.

ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்ட பின்னர் ஃபாரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோரை “சிறிது காலம் காவலில் வைக்க வேண்டியிருந்தது” என்று உள்துறை அமைச்சர் 2ம் தேதி இரவு ஊடக நிறுவனமான ஏபிபி நியூஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

“தயவுசெய்து அவர்கள் அளித்த அறிக்கைகளைப் பாருங்கள். “ 370 வது பிரிவினை தொட்டால் முழு நாடும் தீப்பிடிக்கும்“ என்பது போன்ற இந்த அறிக்கைகளின் பின்னணியில், அவர்களை சிறிது காலம் காவலில் வைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது,” என்று ஷா கூறினார்.

ஃபாரூக் அப்துல்லா மீது கடுமையான பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீநகரில் உள்ள அவரது குப்கர் சாலை இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் உமர் அப்துல்லா ஹரி நிவாஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பி.டி.பி தலைவர் முப்தி ஆரம்பத்தில் செஸ்மாஷாஹி குடிலில் தங்க வைக்கப்பட்டார். ஆனால் பின்னர் அவர் அரசாங்க விடுதிக்கு மாற்றப்பட்டார்.

“அவர்களை விடுவிப்பதற்கான முடிவைப் பொருத்தவரை, இந்த முடிவு உள்ளூர் நிர்வாகத்தால் எடுக்கப்படும், நான் அல்ல,” என்று அவர் கூறினார், நிர்வாகம் உசிதமெனக் கருதும்போதுஅவர்களை விடுவிக்கும் என்று ஷா மீண்டும் தெளிவுபடுத்தினார்.

மேலும், தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கின் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அன்றாட வாழ்க்கை சீராக நடந்து வருவதாகவும் கூறிய ஷா,”காஷ்மீரில் ஒரு அங்குலம் கூட இன்று ஊரடங்கு உத்தரவின் கீழ் இல்லை”,என்றார்.