தலைமை நீதிபதி நியமனம் : அரசை கேள்வி கேட்க உரிமை இல்லை : சட்ட அமைச்சர்

 

டில்லி

டுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் போது எந்த சர்ச்சையும் இருக்காது என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தற்போது தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் இரண்டாம் தேதியுடன் முடிவடைய உள்ளது.  அடுத்ததாக நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என ஒரு ஊகம் உள்ளது.   தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என நான்கு உச்ச்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது நினைவிருக்கலாம்.  அந்த நான்கு நீதிபதிகளில் ரஞ்சன் கோகாயும் ஒருவர் ஆவார்.

தற்போது ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம் என்னும் ஊகம் குறித்து டில்லியில் செய்தியாளர்கள் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் வினா எழுப்பினார்கள்.  ஏற்கனவே தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது சர்ச்சைகள் கிளம்பியதை குறித்தும் அவர்கள் வினா எழுப்பினார்கள்.

அப்போது, “உங்கள் கேள்வி கற்பனையானது.   தலைமை நீதிபதி நியமனம் குறித்த நடைமுறைகள் தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளன.   தற்போதைய தலைமை நீதிபதி தனக்குக் கீழ் உள்ள மூத்த நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்வார்.   அந்த பரிந்துரை அமைச்சகத்துக்கு வந்த பிறகு அது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

அதனால் அடுத்த தலைமை நீதிபதி நியமனத்தில் அரசின் முடிவு குறித்து எந்த சர்ச்சையும் இருக்காது.  மேலும் அரசின் இந்த முடிவை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை” என ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்துள்ளார்.