பெங்களூரு:

திமுகவின் தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் செல்வேன், என்னை கட்சி அலுவலகத்துக்கு வராமல் தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை  என்று அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சவால் விடுத்துள்ளார்.

டிடிவியின் இந்த அதிரடி சவால் எடப்பாடி அணியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெ. மறைவை தொடர்ந்து அதிமுக இரு அணியாக பிரிந்தது. அதையடுத்து, சசிகலா அணி சார்பாக முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். தற்போது, ஜாமினில் வந்துள்ள அவர்  அ திமுகவில் இரு அணி இணைய 60 நாட்கள் கெடுவிதித்து  இருந்தார். இந்த கெடு இன்னும் நாளை மறுதினம் (ஆகஸ்டு 5ந்தேதி)  முடிகிறது.

இதைத்தொடர்ந்து அதிமுகவின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும், சென்னை ராயப்பேட்டை யில் உள்ள  அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசினார்.

பின்னர் சிறைச்சாலைக்கு வெளியே செய்தியாளர்களிடம் டிடிவி பேசியதாவது:

கட்சிப் பணிக்காக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நிச்சயம் செல்வேன் என்றும்,  எப்போது செல்வேன் என்பதை உங்களிடம் (செய்தியாளர்களிடம்) சொல்லிவிட்டு தான் செல்வேன் என்றார்.

3 மாதங்களாக அதிமுக  செயல்படவில்லை.  அதிமுகவின் இருஅணிகளையும்  மற்றவர்களால் ஒன்றுசேர்க்க முடியவில்லை. கட்சியை இணைக்க பாடுபடுவேன் என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி, ஜெயக்குமார் சொல்வதை கேட்டால் உங்களுக்கும், எனக்கு சலித்துவிடும் என்றும், தற்போதைய  தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கூட்டம் நடத்தப்படும் அதில் எனது கருத்தை சொல்வேன் என்றார்.

ஏதோ பயத்தின் காரணமாக  அமைச்சர்கள் எனக்கு எதிராக பேசிக் கொணடிருக்கிறார்கள். அந்த பயம் விரைவில்  மறையும். கட்சியில் நடவடிக்கை எடுக்கும்  அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்று அமைச்சர்களுக்கு தெரியும் என்றார்.

கட்சியின்  துணைப்பொதுச்செயலாளரான என்னை,  கட்சியின் அலுவலகத்துக்கு வராமல் தடுக்க யாருக்கும் அதிகாரமில்லை. அனைத்து அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு எனக்கு உள்ளது என்று கூறினார்.

சிறையினுள்  சசிகலாவுடன் அரைமணி நேரம் பேசினேன் என்று கூறிய டிடிவி,   மற்ற கைதி களுக்கு சிறையில் என்ன வசதிகள் வழங்கப்படுகிறதோ, அவைதான் சசிகலாவுக்கும் வழங்கப்படுகிறது.

சசிகலா குறித்து அவதூறு பரப்பிய,  சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா மீது நிச்சயம் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார்.

நடிகர் கமல் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி, நல்ல சிந்தனையாளரான நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதும், வராததும் அவரது விருப்பம்.

இவ்வாறு கூறினார்.

டிடிவியின் இந்த அதிரடி பேட்டி காரணமாக எடப்பாடி  அதிமுக கலகலத்து உள்ளது.

கடந்த ஒருசில நாட்க ளாக அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி அணியினரும் பலசுற்றுக்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் டிடிவி தினகரன் கட்சி அலுவலகத்துக்கு வருவேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்னும் இரண்டே நாளில் இந்த பிரச்சினையின் முடிவு தெரியவரும். அதிமுக தலைமை கழகத்துக்கு வரும்   தினகரன் கைது செய்யப்படுவாரா? அல்லது எடப்பாடி அணியினர் அவரிடம் மண்டியிடுவார்களா என்பது தெரியவரும்?