அரசின் ரூ. 20 லட்சம் கோடி  நிவாரண திட்டம் பிரமாதம் என யாரும் சொல்லவில்லை : ராஜிவ் பஜாஜ்

டில்லி

பிரதமர் தெரிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண திட்டம் மக்களை சிறிதும் கவரவில்லை எனப் பிரபல தொழிலதிபர் ராஜிவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நாட்டில் எந்த ஒரு தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளும் இயங்கவில்லை.   இதனால் பலரும் பணிக்குச் செல்ல முடியாமல் ஊதியம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.  குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.   அதையொட்டி கடந்த 12 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி தனது தொலைக்காட்சி உரையில் ரூ.20 லட்சம் கோடிக்கான நிவாரண திட்டங்களை அறிவித்தார்.

இது குறித்து பிரபல இரு சக்கர வாகன உற்பத்தியாளர் ராஜிவ் பஜாஜ் தனது கருத்துக்களைச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.  ஊரடங்கு காரணமாகப் பல உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்து வரும் வேளையில் பஜாஜ் நிறுவனம் எந்த தொழிலாளரையும் வீட்டுக்கு அனுப்பாமல் ஊதியக் குறைவையும் அறிவிக்காமல் உள்ளது.

ராஜிவ் பஜாஜ்,”பல மேலை நாட்டு அரசுகள் தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார நிவாரண திட்டங்களை அறிவித்து வருகிறது.   அவற்றுக்கு நிறுவனங்கள் மற்றும் மக்களிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைக்கிறது.   ஆனால் இந்தியா அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி நிவாரண திட்டங்களுக்கு அந்த அளவு ஆதரவு கிடைக்கவில்லை.   நான் இது குறித்து பலருடன் பேசினேன்.  யாருமே இந்த திட்டங்களைப் பிரமாதம் எனக் கூறவில்லை.   மொத்தத்தில் இந்த திட்டங்கள் மக்களைச் சிறிதும் கவரவில்லை

இந்த திட்டங்களுக்குப் பதிலாக அரசு மக்களின் கையில் நேரடியாக பணத்தை அளித்திருக்க வேண்டும்.  அதுவும் ஏழை எளியோரிடம் பணம் அளிப்பது மிகவும் அவசியம் ஆகும்..  அதைப் போல் புலம் பெயர் தொழிலாளர், இடம் மாறியோர் அனைவருக்கும்  நேரடியாகப் பணம் அளிக்க வேண்டும்.    ஊரடங்கால் சுமார் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளதாக நான் அறிந்தேன்.  இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமானதாகும்.

நான் ஆஸ்திரியாவிலுள்ள இருசக்கர உற்பத்தியாளரான ஸ்டீபன் பியரரிடம் பேசும் போது அவர் அந்நிறுவன ஊழியர்களின் ஊதியத்தில் 85% பங்கை அந்நாட்டு அரசு நிறுவனர்களுக்கு திரும்ப அளித்துவிடுகிறது எனத் தெரிவித்தார்.

அரசால் தொழில் நிறுவனங்களின் தினசரி செலவை ஏற்க முடியாது என்பது உண்மைதான்.  அதே வேளையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்யலாம்.  ஆனால் இது குறித்து சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் வாய் திறக்காமல் உள்ளன.  இது மிகவும் வருத்தம் அளிக்கிறது.   சுதந்திர நாட்டில் நிறுவனங்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்காதது சரியானது அல்ல.

நிவாரணம் குறித்து நாட்டில் உள்ள சாதாரண இளைஞர்கள், பெண்கள், ஏழை தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் பேசி வருகின்றனர்.   ஆனால் தொழில்துறை, விளையாட்டுத் துறை, திரைத்துறை பிரபலங்கள் இது குறித்து வாயைக் கூடத் திறப்பதில்லை.  ஒருவேளை அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படாமல் இருக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

You may have missed