வாஷிங்டன்

ம்மைக் காட்டிலும் அதிக தேசப்பற்று உள்ளவர்கள் யாரும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்தே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிர்மப் சீனாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.   சீன நாட்டின் வுகான் நகர ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கலாம் என அவர் குற்றம் சாட்டினார்.  அமெரிக்கக் குழு வுகான் ஆய்வகத்தைச் சோதனை செய்யச் சீனா அனுமதிக்க வேண்டும் என டிரம்ப் கேட்டுக் கொண்டதற்குச் சீனா மறுத்தது.

தற்போது உலக அளவில் மிக அதிக கொரோனா பாதிப்பு உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது.   அதிபர் டிரம்ப் முதலில் முகக் கவசம் அணியவில்லை.  ஆனால் சில தினங்களுக்கு  முன்பு ராணுவ மருத்துவமனைக்குச் சென்ற போது டிரம்ப் முதல் முறையாக முகக் கவசம் அணிந்தார்.  தற்போது தமது முகக் கவசம் அணிந்துள்ள புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்ட டிர்மப், “கண்ணுக்குத் தெரியாத சீனாவின் வைரசைத் தோற்கடிப்பதில் நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாத நேரத்தில் முகக்கவசம் அணிவது தேசப்பற்று மிக்க செயல் எனப் பலரும் தெரிவிக்கின்றனர். என்னைக் காட்டிலும் அதிக தேசப்பற்று மிக்கவர்கள் யாரும் இல்லை. உங்களது விருப்பமான அதிபர்” எனப் பதிந்துள்ளார்.