டில்லி

ற்போது போர் அபாயம் உள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்கே இருக்கிறார் என எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்டுள்ளனர்.

சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர்.  அதில் ஒருவரான சிவசந்திரனுக்கு நேரில் சென்று பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் இறுதி அஞ்சலி செலுத்திய செய்திகள் வெளி வந்தன.  அதன் பிறகு அவரைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வரவில்லை.

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது.   அதற்கு பதிலடியாக எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் போது துரத்திச் சென்ற மிக் 21 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.  விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானியரால் சிறை பிடிக்கப்பட்டார்.  இவ்வளவு நடந்தும் நிர்மலா சீதாராமன் குறித்த எந்த தகவலும் வராததால் பல எதிர்க்கட்சி தலைவர்கள் நிர்மலா சீதாரமன் எங்கு சென்றார் என கேள்விகள் எழுப்பி உள்ளார்.

விங் கமாண்டர் அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டது குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் பாஜகவை குறை கூறின.   ராணுவ தாக்குதல் நடத்தி அரசியல் ஆதாயம் தேடுவதாக அக்கட்சிகள் குறை கூறியதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்னும் முறையில் நிர்மலா சீதாராமன் அதற்கு மறுப்பு அறிக்கை விடவேண்டும்.   ஆனால் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் உமர் அப்துல்லா, “நமக்கு இன்னும் பாதுகாப்பு அமைச்சர் இருக்கிறார். சரியா?” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.   அத்துடன் பல நெட்டிசன்களும் அரசியல் தலைவர்களும் இதே வகையில் பல பதிவுகள் இட்டனர்.    ஆனால் நிர்மலா சீதாராமன் இதற்கு பதில் அளிக்கவும் இல்லை.  தனது டிவிட்டரிலும் எந்த பதிவும் இடவில்லை.

இந்நிலையில் நேர்று மாலை 5  மணிக்கு முப்படை தளபதிகள் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கலந்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வந்தன.  ஆனால் முப்படை தளபதிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.   அதற்கு பதிலாக முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை மாலை 7 மணிக்கு சந்தித்தனர்.   அந்த சந்திப்பிலும், நிர்மலா சீதாராமன் கலந்துக் கொள்ளவில்லை,