திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால், அவைகளில் ஒரு கட்சியின் நிலைமைதான் தற்போதைக்கு பரிதாபமாக உள்ளது.

“எங்களுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும், 41 இடங்கள் கொடுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி, எங்களை மதிக்கவில்லை என்றால் தனித்துப் போட்டி” என்பன போன்ற வசனங்களை அன்றாடம் பேசி வருகிறது அந்தக் கட்சி.

இதே 5 ஆண்டுகளுக்கு முன்னால், 2016 சட்டமன்ற தேர்தலின்போது அந்தக் கட்சிக்கு இருந்த மரியாதையே தனி! திமுக என்ற ஒரு மாபெரும் கட்சி, தேமுதிகவின் தகுதிக்கு மீறிய இடங்களை வழங்குவதாய் அறிவித்து(திரை மறைவில்), அதன் வரவுக்காக தவம் கிடந்தபோதும், அகம்பாவம், வெளிப்படையான பேரம் மற்றும் தெனாவட்டு ஆகியவற்றையே அரசியலுக்கான பண்புகளாகப் புரிந்துகொண்ட ஒரு பெண்மணி மற்றும் அவரது தம்பியின் செயல்பாடுகள் ஒருபுறம் இருக்க, வேறுபலர் சதிவலை விரிக்க, அதில் போய் வசமாக சிக்கியது அக்கட்சி!

அப்போது மாட்டியதுதான்! அதன்பிறகு அக்கட்சிக்கு மீட்சியே இல்லை. ஆனாலும், அந்தப் பெண்மணி மற்றும் அவரது தம்பியின் குணநலன்கள் மாறவேயில்லை என்பது வேறு விஷயம்! இதில், அந்தப் பெண்மணியின் மகன் செய்யும் அலப்பறை தனிரகம்!

இன்றைய நிலையில், அக்கட்சியை ஒரு பொருட்டாக மதிக்க யாரும் தயாராக இல்லாத நிலையில், பலவாறாக குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் அந்தப் பெண்மணியும் அவரின் குழுவும். ஆனால், அவற்றுக்கு காது கொடுப்பதற்குத்தான் யாருமில்லை!

அந்தக் கட்சியின் தலைவர் மீளமுடியாத வகையில் உடல் பாதிப்பிற்கு சென்றுவிட்ட நிலையில், அந்தக் கட்சிக்கென்று எதிர்காலம் என எதுவும் இருப்பதாய் யாராலும் கணிக்க முடியவில்லை. ஏனெனில், அந்தப் பெண்மணி & குழுவின் குணநலன்களும் கொஞ்சமும் மாறவில்லை. இந்தத் தேர்தலே அந்தக் கட்சிக்கான கடைசிப் பொதுத் தேர்தலாய் அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!