கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது! அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை…

சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது  என  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு  அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார்.  

அதிமுகவில் முதல்வர் பதவிக்கான போட்டியில்,  இபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் பலத்தை நிரூபிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் மோதல் கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்திலும் வெடித்தது.  கூட்டம் தொடங்குவதற்கு முன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், நிரந்தர முதல்வர் ஓபிஎஸ் என்றும், ஜெவின் ஆசி பெற்றவர் ஓபிஎஸ் என்றும் கோஷம் எழுப்ப, எடப்பாடி தரப்பினர், அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து செயற்குழு கூட்டத்திலும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது.  முதல்வருக்கும், துணைமுதல்வருக்கும் இடையே நேரடி வாக்குவாதமும் நடைபெற்றது. இதனால், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இரு தரப்பினரும் தங்களது ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர். சில அமைச்சர்கள் இருவருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவைப் பொறுத்தவரை அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் முதல்வர் யார் என்பதில் போட்டி கிடையாது. அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என கூறினார்.

அதுபோல அமைச்சர் செங்கோட்டையன் மறைமுகமாக முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான் என்பதை நாசூக்காக குறிப்பிட்டார்.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்! அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் தகவல்

அமைச்சர்களின் இதுபோன்ற கருத்துக்கள்  அதிமுகவில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  அதிமுகவின் முதல்வர்  வேட்பாளர் பற்றிய அறிவிப்பு அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகும் .செயற்குழு கூட்டம் பற்றி  அமைச்சர்களோ, நிர்வாகிகளோ  வெளியில் கருத்து கூறக்கூடாது.  கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது. அது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட யாராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே  கட்டுப்பாடுதான் என எச்சரித்தார்.

மேலும், அதிமுகவில் எப்போது பிரச்சினை வரும் என எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள். எனவே, அமைச்சர்களும், தொண்டர்களும் அதற்கு இடம் அளிக்கக்கூடாது என்றார்.

அப்போது செய்தியாளர்கள்,  ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தனித்தனியாக ஆலோசனை நடததி வருகிறார்களே என்று கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்தவர், அதில் தவறேதும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.