சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் இருந்து வருகிறது.   இதனால் நாடெங்கும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.   ஆகவே ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்து தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழக அரசுக்குத் தெரிவிக்காமலேயே தமிழக ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியதாக வந்த செய்திகள் சர்ச்சையை உண்டாக்கின.  தமிழகத்தில் இருந்து ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் ஆந்திர மற்றும் தெலுங்கானாவுக்கு அனுப்பியது குறித்து சென்னை நீதிமன்றம் தானாக வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறது.

இந்த விசாரணையில் ஆக்சிஜன் விவகாரத்தில் மற்ற மாநிலங்களில் உள்ளது போன்ற நிலை தமிழகத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பதைத் தடுக்கவும் இந்த வழக்கு பதியப்பட்டதாகவும் உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்தது.   மேலும் தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, வெண்டிலேட்டர் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஆகியவை குறித்து அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

தமிழக அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது.  அந்த விளக்கத்தில், “தமிழகத்தில் ரெம்டெசிவிர், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி ஆகியவற்றில் எந்த பற்றாக்குறையும் இல்லை.   ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி உள்ளது.  தற்போது 1,167 டன் ஆக்சிஜன் மற்றும் 31 ஆயிரம் வயல் ரெம்டெசிவிர் மருந்து உள்ளன.  எனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு ஆக்சிஜன் அனுப்பியதில் பாதிப்பு இல்லை.  தனியார் மருத்துவமனைகள் கேட்டால் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து அனுப்பத் தயாராக உள்ளோம்” எனக் கூறப்பட்டுள்ளது.