எனது மகள்களுக்கு உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மட்டுமே அனுமதி: அஃப்ரிதி

லாகூர்: எனது 4 மகள்களும் உள்ளரங்க விளையாட்டுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களை வெளியரங்க விளையாட்டுகளுக்கு அனுமதிப்பதில்லை எனவும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

எனது இந்த முடிவு குறித்து பெண்ணியவாதிகள் தாங்கள் விரும்பிய விமர்சனத்தை வெளிப்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ள அவர், தனது முடிவு சமூக மற்றும் மதம் சார்ந்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் தனது நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

அன்ஷா, அஜ்வா, அஸ்மரா மற்றும் அக்ஸா என்ற பெயர்களுடைய அஃப்ரிடியின் 4 மகள்களும் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது.

“ஆனால் எதுவாக இருப்பினும் அவர்களுக்கு உள்ளரங்க அளவில்தான் அனுமதி. என் மகள்களுக்கு கிரிக்கெட் விளையாட்டெல்லாம் சரிப்படாது. அவர்கள் உள்ளரங்க அளவில் எந்த விளையாட்டையும் மேற்கொள்ளலாம்.

வெளியரங்கம் என்று வரும்போது நிச்சயமாக அனுமதிக்க முடியாது. எனது வாழ்க்கை அவர்களைச் சுற்றிதான் சுழல்கிறது. அவர்களுடைய வாழ்க்கையின் லட்சியங்களை அடைய, ஒரு பொறுப்புள்ள தகப்பனாக ஆதரவளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். அஃப்ரிடி.