சென்னை:

வீடுகளில் பிரார்த்தனை நடத்த முன்அனுமதி பெற தேவையில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கோவை அருகே உள்ள சின்னவம்பட்டியில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர், வீடுகளில் பிரார்த்தனை செய்ய காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக கூறி  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கிறிஸ்தவ மத போதகர் தனது வீட்டில் பிரார்த்தனை கூட்டம் நடத்துவதை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் காவல்துறையில் புகார் தெரிவித்ததையடுத்து, வீட்டில் பிரார்தனை நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்தனர்.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை,  விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், சொந்த வீட்டில் பிரார்த்தனை  நடத்த காவல்துறை அனுமதி பெறத்தேவையில்லை என்று உத்தரவிட்ட நிலையில்,இது தொடர்பாக கோவை காவல்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் வழங்கிய தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வீட்டில் பிரார்த்தனை நடத்த யாருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை என்று கூறி உள்ளது.

தீர்ப்பு கூறிய நீதிபதி ஆதிவேசவலு, மத சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் மத விவகாரங்களை கடைப்பிடிப்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஒவ்வொருவரது அடிப்படை உரிமை. ஆனால் அவை பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கு உட்பட்டவை என்று தெரிவித்துள்ளார்.